UPDATED : செப் 20, 2024 12:00 AM
ADDED : செப் 20, 2024 09:40 AM
தமிழகத்தில் வேளாண் துறையின் கீழ் 26 மாவட்டங்களில் வேளாண் இணை இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் வேளாண் அலுவலர்கள் தொடங்கி ஒவ்வொரு நிலையிலும் பதவி உயர்வை எதிர்பார்த்து பணியாளர்கள் காத்திருக்கின்றனர்.
விவசாயத்துறையில் மாவட்டத்தில் அனைத்து விவசாய பணி, திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுபவர் வேளாண் இணை இயக்குநர். அவருக்கு கீழ் மத்திய, மாநில திட்ட துணை இயக்குநர்கள், ஒவ்வொரு வட்டாரத்திலும் உதவி இயக்குநர்கள், அவர்களுக்கு கீழே வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் மற்ற பணியாளர்கள் செயல்படுகின்றனர்.
விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு இணை இயக்குநர்கள் பதில் சொல்ல வேண்டும். ஆனால் 26 மாவட்டங்களில் இணை இயக்குநர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. 10 மாவட்டங்களில் தான் ரெகுலர் இணை இயக்குநர்கள் உள்ளனர்.
வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
காலிப்பணியிடம் உருவான கதை
1980களில் டி.என்.பி.எஸ்.சி., விவசாயத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வேளாண் அலுவலர்களாக ஆராய்ச்சி பிரிவு மற்றும் விரிவாக்கத் துறை என பிரிக்கப்பட்டு பணியில் சேர்க்கப்பட்டனர். மண், உரம், பூச்சிமருந்து பரிசோதனையில் ஆராய்ச்சி பிரிவினரும் விவசாயிகளுக்கான திட்டங்கள், ஒருங்கிணைப்பில் விரிவாக்க துறையினரும் ஈடுபட்டனர். 2008ல் இருதுறைகளும் ஒன்றிணைக்கப்பட்டாலும் அந்தந்த துறையின் கீழ் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ஆராய்ச்சி துறையில் ஆட்கள் குறைவு என்பதால் வேளாண் அலுவலர்கள் உதவி இயக்குநர், துணை இயக்குநர்களாகி தற்போது இணை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றனர். விரிவாக்கத்துறை துணை இயக்குநர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் இணை இயக்குநர் பதவி கிடைக்கவில்லை.
ஆராய்ச்சி துறையில் துணை இயக்குநர் நிலையில் உள்ளவர்கள் தற்போது இருதுறைக்கும் ஒரே சீனியாரிட்டி கொண்டு வரவேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் விரிவாக்கத்துறையில் துணை இயக்குநர்கள் தற்போது வரை பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இவர்களில் 5க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்றனர். தமிழக அரசுக்கு நீதிமன்றம் 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
உயர்பதவி காலியாக இருப்பதால் கீழ்நிலை பதவியில் உள்ளவர்கள் வரை பதவி உயர்வு பெறமுடியவில்லை. தமிழக அரசு வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தால் துணை இயக்குநர்களுக்கு இணை இயக்குநர் பதவி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் வேளாண் அலுவலர்கள் உதவி இயக்குநர்களாகவும், உதவி இயக்குநர்கள் துணை இயக்குநர்களாகவும் பதவி உயர்வு பெறமுடியும்.
துணை இயக்குநர்களாக தற்போது பணியில் உள்ளவர்கள் அவர்களது பணியுடன் இணை இயக்குநருக்கான கூடுதல் பணியையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல காலியாக உள்ள துணை இயக்குநர் பணியிடத்திற்கு உதவி இயக்குநர்கள் கூடுதல் சுமையுடன் வேலை செய்ய வேண்டியுள்ளது.
அடிக்கடி நடத்தப்படும் வீடியோ கான்பரன்சிங் கூட்டம், அடிக்கடி மேலிடத்தில் இருந்து கேட்கப்படும் புள்ளி விபர பட்டியல்களால் திணறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பதவி உயர்வு ஒன்றே சரியான தீர்வாக இருக்கும் என்றனர்.