ஆசிரியர்களை குற்றவாளிகள் போல் கைது செய்வதா பல்வேறு சங்கங்கள் கண்டனம்
ஆசிரியர்களை குற்றவாளிகள் போல் கைது செய்வதா பல்வேறு சங்கங்கள் கண்டனம்
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 10:43 AM

மதுரை:
ஆசிரியர்கள் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல; சென்னையில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியவர்களை குற்றவாளிகள் போல் கைது செய்வது கண்டனத்துக்குரியது என தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி (தொ.ப.ஆ.கூ) மதுரை மேற்கு வட்டார தலைவர் செல்வக்குமரேசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சென்னையில் டிட்டோ - ஜாக் சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் 31 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் அரசாணை எண்:243 ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பிரதானமாக முன்வைக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித்துறை என்றாலே 90 சதவீதம் பேர் ஆசிரியைகள் தான் பணியாற்றுகின்றனர். இத்துறையில் 60 ஆண்டுகாலமாக ஒன்றிய அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் தான் ஆசிரியர்களுக்கு பணிமாறுதல், பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்தன.
ஆனால் இந்த புதிய அரசாணைப்படி மாநில அளவிலான சீனியாரிட்டி பின்பற்றப்பட்டு தற்போது நடத்தப்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு மனஉளைச்சலில் உள்ளனர். மீண்டும் ஒன்றிய சீனியாரிட்டியை பின்பற்ற வேண்டும்.
இதுகுறித்து ஒன்றிய, மாவட்ட அளவில் பல போராட்டங்களை நடத்தியும் அரசு கவனத்தில்கொள்ளவில்லை. இதையடுத்து முறையாக அறிவிக்கப்பட்டு தான் சென்னையில் போராட்டம் துவங்கியுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினாலும் குற்றவாளிகள் போல் ஆசிரியர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் நிதிசாரா கோரிக்கைகளில் ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கலாம். ஆசிரியர்கள் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. போராட்டம் நடத்த அரசே காரணமாகி விடக்கூடாது என்றார்.
கைது சம்பவத்தை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது:
அடக்குமுறைகளை ஏவிவிடாதீர்கள்
முருகேசன், மாநில செய்தி தொடர்பாளர், தமிழ்நாடு உயர் நிலை:
மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்: நீதிக்காக போராடும் டிட்டோஜாக் ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அடக்கு முறைகளை ஏவிவிட்டு அவர்களின் நியாயமான போராட்டங்களை நசுக்க, ஒடுக்க முற்படுவது என்பது பிரச்னைகளை தீர்க்க அணு அளவும் பயன்படாது. மாறாகதமிழகமே ஒரு போராட்ட களமாகவே மாறும் என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். உடனடியாக டிட்டோஜாக் ஆசிரியர்அமைப்பின் தலைவர்களை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளான சி.பி.எஸ்., ரத்து, அரசாணை 243 ரத்து என அனைத்தையும் ஏற்றிட முன் வருமாறுகேட்டுக்கொள்கிறோம்.
மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
பேட்ரிக் ரெய்மாண்ட், பொதுச்செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு:
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை தவிர இதர கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களிடம் மீண்டும் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நிறைவேற்றக் கூடிய கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்வு காலம் என்பதால் மாணவர்களின் நலன் முக்கியம் என்பதை ஆசிரியர்களும், அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து ஆசிரியர் சங்கங்களும் களமிறங்கும்
அ.சங்கர், மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்:
31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சென்னையில் மறியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.தமிழக அரசு போராடும் டிட்டோ ஜாக் அமைப்பினரை அழைத்து பிரச்னையை சரி செய்வதை தவிர்த்துபோலீசாரை ஏவி விட்டு அடக்கு முறையை கையாள்வது மிக கடுமையான செயல். உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை கைது நடவடிக்கை எடுப்பதும் அடக்கு முறையை கையாளுவதும் கொடுஞ்செயல். உடனே தமிழக அரசு டிட்டோ ஜாக் அமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுலபமாக தீர்க்க வேண்டும்.இல்லையேல் டிட்டோ-ஜாக் அமைப்பிற்கு ஆதரவாக அனைத்து ஆசிரியர் சங்கங்களும் களமிறங்கும்.
அரசு மீது வெறுப்பின் உச்சத்தில் ஆசிரியர்கள்
ஆ.முத்துப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29 முதல் 31 வரை சென்னையில் முற்றுகை போராட்டம் நடக்கிறது. இதற்கு முன் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த கால போராட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் டிட்டோஜாக் நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை கூட 10 மாதங்களாகியும் நிறைவேற்றவில்லை.
பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் காலத்தில் அரசாணை 101 மூலம் தொடக்கக்கல்வி துறையை ஒழித்தார். அதன்பின் கடுமையான போராட்டத்தின் விளைவாக அது ரத்து செய்யப்பட்டது.
குமரகுருபரன் பள்ளி கல்வித்துறை செயலாளராக இருந்த போது அரசாணை 243யை வெளியிட்டு தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தான் பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243 யை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் எங்களை அழைத்து பேசாமல் போலீசாரை ஏவிவிட்டு அடக்கு முறையில் ஈடுபட்டு வருகிறது தமிழக அரசு. இந்த அரசு வர வேண்டும் என விரும்பிய ஆசிரியர்கள் இன்று வெறுப்பின் உச்சத்திற்கு சென்று உள்ளனர்.
கைது செய்வது நியாயமல்ல
ச.மயில், மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி: ஆசிரியர்களை ஆசிரியர்களாக மதிக்காமல் குற்றவாளி போல் நடத்தி கைது செய்யும் போலீசாரையும், கடந்த டிட்டோ ஜாக் போராட்டத்தின் போது கல்வி அமைச்சர் தலைமையில் ஒப்புக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் இன்று வரை நிறைவேற்றப்படாமல் உள்ளதையும் கண்டிக்கிறோம்.
எங்களது நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தான். அதற்கு தி.மு.க., அரசு முன்வர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் போல உயர்த்தி வழங்க வேண்டும். பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை கெடுக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்ய நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம்.
அரசு செவி சாய்க்காமலே உள்ளது. அதை ரத்து செய்து முன்பு போலவே பொது மாறுதல் கலந்தாய்வில் ஒன்றிய அளவிலான முன்னுரிமையை பின்பற்ற வேண்டும். டெட் தேர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போது தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும். நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ரூ.8 லட்சம் 12 லட்சம் வரை பணம் பெற்று கொண்டு மாறுதல் வழங்குவதை கண்டிக்கிறோம்.
இந்த கோரிக்கைகளை எல்லாம் வலியுறுத்தி நியாயமான முறையில் போராடி வரும் ஆசிரியர்களை கைது செய்வது நியாயமல்ல. நேற்றும் 5 ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.