பள்ளி பஸ்களில் இருக்கை விபரம் பதிவு செய்ய முனைப்பு
பள்ளி பஸ்களில் இருக்கை விபரம் பதிவு செய்ய முனைப்பு
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 10:44 AM

பொள்ளாச்சி:
ஐகோர்ட் உத்தரவுப்படி, பள்ளி பஸ்களில் மாணவர்களின் இருக்கை விபரத்தை, பஸ்சின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பதிவு செய்திருப்பது, உறுதி செய்யப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, பெரும்பாலான தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவியரை அழைத்து வர பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அவ்வாறு, இயக்கப்படும் பள்ளி பஸ்களில், வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும். பஸ் நடத்துனர்களாக அனுபவம் பெற்றவர்களை நியமிக்க வேண்டும். நெரிசல் மிகுந்த இடங்களில் பஸ்களை நிறுத்தி மாணவர்களை இறக்கி விடக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஆண்டுதோறும், பஸ்களின் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.
தற்போது, பள்ளி பஸ்களில், இருக்கை விபரத்தை, பஸ்சின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பதிவு செய்திருப்பதை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணியில் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளிகளில், மாணவர்களை அழைத்துச் செல்லப் பயன்படுத்தும் பஸ்களின் இருக்கை விபரம், அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக பெறப்பட்ட படிவத்தில், துல்லியமாக பூர்த்தி செய்து அனுப்பி வைக்கப்படவும் உள்ளது.
அவ்வகையில், பல தனியார் பள்ளி நிர்வாகத்தினர், இதற்கான பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.