UPDATED : நவ 15, 2024 12:00 AM
ADDED : நவ 15, 2024 01:11 PM

சென்னை:
புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, தன்னாட்சி கல்லுாரிகளுக்கான தென்மண்டல மாநாடு, சென்னை, ஐ.ஐ.டி.,யில், நேற்று நடந்தது.
இதில், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ்குமார் அளித்த பேட்டி:
நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும். அதற்கு, பள்ளி, உயர்கல்வித் துறை வழியாக, நம் இளைஞர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சி வழங்குவது அவசியம். இதற்கு, யு.ஜி.சி., பல மாற்றங்கள் மற்றும் திட்டங்களை கொண்டு வருகிறது. நேஷனல் கிரெடிட் பிரேம் ஒர்க் போன்ற திட்டங்களை உதாரணமாக சொல்லலாம்.
கல்விக் கொள்கையை எந்த பெயரில் கூறினாலும், அது தனித்துவமான ஒருங்கிணைந்த கல்வி முறையை, மாணவர்களுக்கு வழங்குவதாகவும், உயர்கல்வித் துறையை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். உயர்கல்வி மாணவர்களை, தங்கள் பிரச்னைகளை தீர்க்கும் வல்லமை உடையவர்களாக மாற்றும், கல்விக் கொள்கை வேண்டும். இதெல்லாம், தற்போதைய புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.
நெட் உள்ளிட்ட தேர்வுகளில், வினாத்தாள் கசிவை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் உள்ள பல்கலைகளில் துணை வேந்தர்கள் இருக்க வேண்டியது அவசியம். தலைவர்கள் இல்லாமல் கல்லுாரிகள் செயல்படுவது சிறப்பாக இருக்காது. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசை வலியுறுத்தி உள்ளோம்.