டிஜிட்டல் முறை பயிர் கணக்கெடுப்பு வேளாண் மாணவர்களுக்கு நெருக்கடி
டிஜிட்டல் முறை பயிர் கணக்கெடுப்பு வேளாண் மாணவர்களுக்கு நெருக்கடி
UPDATED : நவ 15, 2024 12:00 AM
ADDED : நவ 15, 2024 01:15 PM

சென்னை:
டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், அடுத்தடுத்து நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
வேளாண் நிலம், பரப்பளவு, அதன் தன்மை, சாகுபடி செய்யப்படும் பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை, டிஜிட்டல் மயமாக்கும் வகையில், மத்திய அரசு புதிய கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தது.
இந்த, டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணிகளை, 2025 ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இப்பணிகளை செய்ய, 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி மொபைல் போன் செயலி, மத்திய அரசால் உருவாக்கப்பட்டு உள்ளது. வி.ஏ.ஓ.,க்களை வைத்து, இப்பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டது.
நிலங்களின் அளவு, வகைப்பாடு உள்ளிட்ட அனைத்து விபரங்களும், அவர்களுக்கு தெரியும் என்பதால், பணிகளை விரைந்து முடிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மதிப்பூதியம் வழங்குவது உட்பட சில கோரிக்கைகளை, வி.ஏ.ஓ.,க்கள் முன் வைத்தனர்.
அதை வருவாய் துறை அதிகாரிகள் ஏற்காததால், வி.ஏ.ஓ.,க்கள் புறக்கணித்தனர். அதைத் தொடர்ந்து, பணிகளை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில், வேளாண் கல்லுாரி மாணவர்களை, கணக்கெடுப்பு பணியில் அரசு ஈடுபடுத்தி உள்ளது.
இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கவில்லை. இதனால், கணக்கெடுப்பில் தவறு நடக்க வாய்ப்புள்ளது என்று கூறி, மாணவர்களை கணக்கெடுப்பில் ஈடுபடுத்த, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு நாட்களுக்கு முன், மாணவர்கள் கணக்கெடுப்பு பணிக்கு சென்றுள்ளனர். வேளாண் துறை அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.
கல் குவாரி அருகில் உள்ள நிலத்திற்கு செல்ல முயன்றபோது, அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். அதிகாரி மீது தாக்குதலும் நடத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு, டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்புக்கு செல்லும் மாணவர்கள், பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.