வரையாடு தின விழிப்புணர்வு போட்டிகள் சாதித்த மாணவர்களுக்கு முதுமலை வனத்தில் வாகன சவாரி
வரையாடு தின விழிப்புணர்வு போட்டிகள் சாதித்த மாணவர்களுக்கு முதுமலை வனத்தில் வாகன சவாரி
UPDATED : ஜன 18, 2025 12:00 AM
ADDED : ஜன 18, 2025 11:47 AM
கூடலுார்:
முக்கூர்த்தி வனத்துறை சார்பில் நடந்த, நீலகிரி வரையாடு தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் முதுமலை வனப்பகுதியில் வாகன சவாரி அழைத்து செல்லப்பட்டனர்.
நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் அக்., 7ம் தேதி வரையாடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்கா வனத்துறை சார்பில், அக்., 7ம் தேதி மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வரையாடு பாதுகாப்பு தின விழிப்புணர்வு ஓவியம், கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் நடந்தது. இந்நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு, முதுமலை தெப்பக்காடு வரவேற்பு மையத்தில் போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
வனச்சரகர் யுவராஜ்குமார் தலைமை வகித்தார். போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு முதுமலை துணை இயக்குனர் வித்யா பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாசன், வனவர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட வன ஊழியர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, முதுமலை வனப்பகுதிக்குள் மாணவர்கள் அனைவரும் வாகன சவாரி அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள், யானை, மான், காட்டெருமை, மயில் போன்ற வன உயிரினங்களுடன், புலி, சிறுத்தை, மலைப்பாம்பு ஆகியவற்றை பார்த்து, போட்டோ எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.