மனநிறைவும், ஏக்கமும் தந்த விதான் சவுதா புத்தக திருவிழா
மனநிறைவும், ஏக்கமும் தந்த விதான் சவுதா புத்தக திருவிழா
UPDATED : மார் 04, 2025 12:00 AM
ADDED : மார் 04, 2025 06:56 PM
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை புத்தக திருவிழா, புத்தக பிரியர்களின் மன நிறைவுடன் நேற்று முடிந்தது.
கர்நாடக வரலாற்றில் முதன் முறையாக, அரசு சார்பில், பிப்., 27ல் கர்நாடக சட்டசபை புத்தக திருவிழாவை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். விதான் சவுதா வளாகத்தில் அமைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஸ்டால்களில், கன்னடம், துளு, கொங்கனி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புத்தக ஸ்டால்கள் வைக்கப்பட்டிருந்தன.
நான்கு நாட்கள் நடந்த கருத்தரங்கில், பல தலைப்புகளில் கருத்தரங்குகள், கலந்துரையாடல், மாலையில் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. பல இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.
இதுவரை விதான் சவுதாவை, தடுப்புகளுக்கு பின்னால் இருந்து பார்த்த பொது மக்கள், விதான் சவுதா வளாகத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டதால் உற்சாகம் அடைந்தனர்.
சிறுவர்களுக்கான கல்வி அறிவை பெருக்கும் புத்தகங்கள், இளம் தலைமையினருக்கான ஊக்கம் அளிக்கும் புத்தகங்கள், நடுத்தர வயதோருக்கான கதைகள், நாவல்கள், பெரியவர்களுக்கான ஆன்மிக புத்தகங்களும் இடம் பெற்றிருந்தன.
இத்துடன் சட்டசபை வளாகத்துக்குள் சென்று சுற்றிப்பார்க்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
நிறைவு நாளான நேற்று, நகரின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர். இன்னும் சில நாட்கள் நீடித்திருக்க கூடாதா என்று ஏங்கினர். பெரும்பாலான கடைகளில், 50 சதவீதத்துக்கும் அதிகமான புத்தகம் தீர்ந்ததாக பதிப்பாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ் புத்தக ஸ்டால்
நாகர்கோவிலை தலைமை இடமாக கொண்ட காலச்சுவடு பதிப்பகம் சார்பில் ஒரு ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு, தமிழ் புத்தகம் மட்டுமல்ல, கன்னட எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளான கிரீஷ் கர்னாட், அனந்த மூர்த்தி, அக்கமகாதேவி, வசுதேந்த்ரா, சித்தலிங்கையா, விவேக் ஷான்பாக், கிருபாகர் - சேனானி, அரவிந்த மாளகத்தி, ஜயந்த் காய்கணி ஆகியோரின் புத்தகங்களும் இடம் பெற்றிருந்தன.