கோயில், பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி: குழந்தைகளை தானியங்களில் எழுத வைத்து துவக்கினர்
கோயில், பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி: குழந்தைகளை தானியங்களில் எழுத வைத்து துவக்கினர்
UPDATED : அக் 21, 2026 04:53 PM
ADDED : அக் 21, 2026 04:54 PM
தேனி:
விஜயதசமியை முன்னிட்டு நேற்று பல கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத கற்றுத்தரும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தது. தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை துவக்கும் நிகழ்வாக அரிசி, நெல்லில் விரலால் எழுத வைத்து துவக்கி வைத்தனர். பல பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாணவர் சேர்க்கை நடத்தினர்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது. உறவின்முறை தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜீவகன், பொது செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமசந்திரன் பங்கேற்றனர்.
அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளி மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் முதல்வர் பரந்தாமன் தலைமை வகித்தார். செயலாளர் பாக்கியகுமாரி முன்னிலை வகித்தார். இதில் துணை முதல்வர் வினோத்குமார், மேலாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி:
லிட்டில் பிளவர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது. பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம், நிர்வாகி தமயந்தி ஆகியோர் முன்னிலையில் குழந்தைகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து மஞ்சள் கலந்த பச்சரிசியில் வித்தியாரம்பம் செய்து குழந்தைகளின் கல்வி பயணத்தை துவக்கி வைத்தனர். பள்ளி செயலாளர் மேத்யூ ஜோயல், முதல்வர் உமா மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை ஊக்குவித்து பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
உத்தமபாளையம்:
விகாசா மெட்ரிக் பள்ளி,பப்ளிக் பள்ளிகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தினர். பள்ளி தாளாளர் இந்திரா, நிர்வாக குழு தலைவர் உதயகுமார் ஆகியோர் அரிசியில் 'அ' என குழந்தைகளை எழுத வைத்து கல்வி பயணத்தை துவக்கி வைத்தனர்.
கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளி, ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி, சக்தி விநாயகர் மெட்ரிக் பள்ளிகளிலும் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
கூடலுார்:
கூடல் சுந்தரவேலவர் கோயில் வளாகத்தில் உள்ள சரஸ்வதி அம்மன் சன்னதியில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த அரிசி மற்றும் நெல்மணிகளை தாம்பலத்தில் பரப்பி குழந்தைகளின் கையைப் பிடித்து 'அரி ஹரி ஓம்' என எழுதி கல்வி பயணத்தை துவக்கி வைத்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
