திருவருளும், குருவருளும் இனிதே இணைந்தது... வித்யாரம்பம் கோலாகலம்! அனா... ஆனா எழுதி கல்விப்பயணத்தை துவக்கிய மழலைகள்
திருவருளும், குருவருளும் இனிதே இணைந்தது... வித்யாரம்பம் கோலாகலம்! அனா... ஆனா எழுதி கல்விப்பயணத்தை துவக்கிய மழலைகள்
UPDATED : அக் 21, 2026 04:54 PM
ADDED : அக் 21, 2026 04:55 PM
திருப்பூர்:
ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் நடந்த வித்யாரம்ப நிகழ்ச்சியில், 300 குழந்தைகள், 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி எழுதி, சான்றோர்கள் ஆசியுடன் தங்களது கல்விப்பயணத்தை மங்களகரமாக துவங்கினர்.
'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்ற வகையில், 'தினமலர்' பட்டம் பதிப்பு, ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் மற்றும் ஜகன்மாதா ஸ்ரீராஜ ராஜேஸ்வரி டிரஸ்ட் சார்பில், ராக்கியபாளையம் ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீபுரம் ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், நேற்று, வித்யாரம்பம் நிகழ்ச்சி, பண்டிதர்களின் வேத பாராயணம், ஆன்றோர்களின் நல்லாசியுடன் நேற்று நடைபெற்றது.
கோவில் வளாகத்தில், அர்ச்சர்கள் குழுவினரால், ஸ்ரீசரஸ்வதி ஸூக்த யாகம், ஹயக்ரீவர் யாகம் போன்ற யாகசாலை பூஜைகள் துவங்கின. அதிகாலை முதல், மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல், குழந்தைகளுடன் பெற்றோர் வந்துவிட்டனர். தங்களது பெயர் பதிவை சரிபார்த்து, 'டோக்கன்' பெற்று, பூஜையில் பங்கேற்றனர்.
சரவண மாணிக்கம் தலைமையிலான அர்ச்சகர் குழு, யாகசாலை பூஜைகளை, வேத பாராயணங்களுடன் நிகழ்த்தினர். நிறை வேள்வியை தொடர்ந்து, குழந்தைகள் கல்விக்கான கூட்டு பிரார்த்தனை நடந்தது. அதனை தொடர்ந்து, கல்வியாளர்கள் முன்னிலையில், குழந்தைகளுக்கான எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி துவங்கியது.
அவிநாசி, திருப்புக்கொளியூர் வாசீகர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், குழந்தைகளுக்கு 'அ'னா, 'ஆ'ன்னா எழுதி, எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஜகன்மாதா ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்பாள் கோவில் அறக்கட்டளை தலைவர் ஞானகுரு - லாவண்யா தம்பதியர், ஸ்ரீசக்தி கல்விக்குழுமங்களின் சேர்மன்கள் தங்கவேல், தீபன் தங்கவேல், ஆடிட்டர் ராமநாதன், 'கிளாசிக் போலோ' நிர்வாக இயக்குனர் சிவராம், டாக்டர் துர்கா, நாமக்கல் 'டிரினிட்டி'மகளிர் செயல் இயக்குனர் அருணா செல்வராஜ் ஆகியோர் குழந்தைகளின் பிஞ்சு விரல்களை, நெல்லில் 'அ' என எழுதி வைத்து, கல்வி பயணத்தை துவக்கி வைத்தனர்.
குழந்தைகள் உற்சாகம்
நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர் குடும்பத்தினர், நிதின், ஆதிஅத்வைதா, நவோதிதா, திருக்கோவில் திருத்தொண்டர் பேரவை நிர்வாகி ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். 'வித்யாரம்பம்' செய்து கொண்ட குழந்தைகளுக்கு, ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் சார்பில், ஸ்கூல் பேக், சிலேட், பென்சில், கிரேயான்ஸ், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில், குழந்தைகளுக்கான ரெடிமேடு வேட்டி -சட்டை, பேனா, ஸ்லேட்- பென்சில், ரப்பர், ஸ்கேல், கலர் பென், ஸ்கெட்ச், கிரயான்ஸ் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
மங்கள வாத்திய இன்னிசையுடன், காலை, 8:00 மணிக்கு துவங்கிய எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி, 11:00 மணி வரை தொடர்ந்து நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த, நுாற்றுக்கும் அதிகமானவர்கள், குடும்பத்துடன் வந்து, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
'அ'னா, 'ஆ'வன்னா எழுதியதும், கையில் பேனா, பென்சில், 'பேக்' ஆகியன கிடைத்ததால், குழந்தைகள் பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு, கோவில் வளாகத்தில் நடந்து கொண்டிருந்தது, கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
