நோட்டு புத்தகங்கள் விற்பனை தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
நோட்டு புத்தகங்கள் விற்பனை தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
UPDATED : மே 16, 2025 12:00 AM
ADDED : மே 16, 2025 11:02 AM
தங்கவயல்:
தங்கவயலில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள், காலணிகள் கட்டாயப்படுத்தி விற்கப்படுவதற்கு வட்டார கல்வி அதிகாரி மஞ்சுநாத் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
தங்கவயலில் சில தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு சேர்க்கைக்கு, மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதாக பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் புகார் செய்துள்ளனர். கர்நாடகாவில் இத்தகைய தேர்வு நடத்த வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. ஆனால், சில தனியார் பள்ளிகளில் தேர்வு நடத்தி சேர்த்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இத்தகைய பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதை மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும். சில தனியார் பள்ளிகளில் சீருடைகள், நோட்டு புத்தகங்கள், காலணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. பள்ளிகளை வியாபார தலமாக்குவதை ஏற்க முடியாது.
பள்ளி நிர்வாகங்கள், கல்வியறிவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். தங்கவயல் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.