வயநாடு நிலச்சரிவில் பாதிப்பு ; தமிழக ஆசிரியர்கள் உதவிக்கரம்
வயநாடு நிலச்சரிவில் பாதிப்பு ; தமிழக ஆசிரியர்கள் உதவிக்கரம்
UPDATED : செப் 04, 2024 12:00 AM
ADDED : செப் 04, 2024 08:13 AM

பந்தலுார்:
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பலரின் குடும்பத்துக்கு ஆசிரியர்கள் பலர் நல உதவிகள் வழங்கப்பட்டது.
கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதியில், கடந்த, 30-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டதில், 400க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். தமிழகத்தை சேர்ந்த பலரும் அங்கு வேலை செய்து வந்த நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர்.
அதில், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியை சேர்ந்த, 4 பேர் நிலச்சரிவில் பலியாகினர். இவர்களின் குடும்பத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், கூடலுார் மற்றும் பந்தலுார் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இணைந்து, 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உதவி செய்துள்ளனர்.
வயநாடு மாவட்ட நிர்வாகத்திடம், 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சூரல்மலை மற்றும் முண்டைக்கை பகுதியில் சிக்கி பலியான, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி அனந்திகா, காளிதாஸ், கல்யாணகுமார், சிகாபுதீன் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா, 75 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
மேலும், நாடுகாணி பொன்னுார் பகுதியை சேர்ந்த விஜயேந்திரன் என்பவர் சூரல்மலைப்பகுதியில், குடியேறி பணியாற்றி வந்த நிலையில் அவரது வீடும் பாதிக்கப்பட்டது. அவருக்கும், 25 ஆயிரம் ரூபாய் உதவி செய்துள்ளனர்.