இந்தியப் பள்ளிகளின் கட்டமைப்பு தரவுகள் சொல்வது என்ன?
இந்தியப் பள்ளிகளின் கட்டமைப்பு தரவுகள் சொல்வது என்ன?
UPDATED : அக் 14, 2026 05:39 PM
ADDED : அக் 14, 2026 05:44 PM
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் முறைமை (யு.டி.ஐ.எஸ்.இ.,) செயல்படுகிறது.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் விவரங்கள், இடைநிற்றல் விகிதம் போன்றவற்றைத் நிகழ்நேரத்தில் சேகரித்து கல்வித் திட்டமிடலுக்கு உதவுவது இந்த அமைப்பின் நோக்கம். தேசிய கல்விக் கொள்கை 2020ன் அடிப்படையில் யு.டி.ஐ.எஸ்.இ., பிளஸ் 2025-2026 ஆண்டுக்கான தரவுகளை வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை தயாரித்துள்ள இந்த தரவுகள், தற்போதைய இந்தியப் பள்ளிகள் குறித்த தரவுகளை விரிவாக விளக்குகின்றன.
இதன் படி, இந்தியாவில் 14.67 லட்சம் பள்ளிகள் உள்ளன. ஆசிரியர்கள் 1.03 கோடி பேர். மாணவர்கள் 24.72 கோடி . ஒரு பள்ளிக்குச் சராசரியாக 7 ஆசிரியர்களும், 169 மாணவர்களும் உள்ளனர்.
ஆசிரியர் மாணவர் விகிதம் தேசிய அளவில் 1:24 என்ற அளவில் உள்ளது. இது, தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைத்த அளவை விட சிறப்பான ஒன்று.
மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, இடைநிலைப் பள்ளிகளில் (Secondary) , 71.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே நடுநிலைப் பள்ளிகளில் (Middle) 89.6 சதவீதமாக உள்ளது.
இடைநிற்றல் (Dropout Rates) குறைந்து வருகிறது. ஆரம்ப நிலையில் 1.8 சதவீதமாகவும், நடுநிலையில் 3.6 சதவீதமாகவும், இடைநிலையில் 7 சதவீதமாகவும் உள்ளது.
தேர்ச்சி விகிதம்
பவுண்டேஷனில் இருந்து ஆயத்த நிலைக்கு 99.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுச் செல்கின்றனர். நடுநிலைப் பள்ளிக்கு, 93.8 சதவீதம் பேரும், செகண்டரி நிலைக்கு 88.3 சதவீதம் பேரும் செல்கின்றனர்.
ஓராசிரியர் பள்ளிகள்
ஓராசிரியர் பள்ளிகள் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், 3 சதவீதம் குறைந்துள்ளன. தற்போது, 1 லட்சத்து 843 ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன.
மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளின் (Zero-Enrolment Schools) எண்ணிக்கை 29 சதவீதம் குறைந்துள்ளது. 5,663 பள்ளிகள் உள்ளன.
பாலின சமத்துவம்
பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை தொடர்ச்சியாக உயர்ந்து குறிப்பிடத்தக்க பங்கை எட்டியுள்ளது. மொத்த மாணவர் சேர்க்கையில், பெண் குழந்தைகளின் பங்கு 48.4 சதவீதமாக உள்ளது. பெண் கல்வி உயர்ந்து வரும் அதே சமயம், பள்ளிகளில் பாலின சமத்துவமும் அதிகரித்து, ஆசிரியர் பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு 54.9 சதவீதமாக உள்ளது.
பள்ளிகளில் கட்டமைப்பு
கணினி வசதி கொண்ட பள்ளிகள்: 69.9%
இணையதள வசதி கொண்ட பள்ளிகள்: 67.4%
பாதுகாக்கப்பட்ட குடிநீர்: 99.5%
மாணவிகளுக்கான கழிப்பறை: 98.5%
மாணவர்களுக்கான கழிப்பறை: 97.2%
கை கழுவும் வசதி: 96.9%
மின்சார வசதி: 95.0%
நூலகங்கள்: 90.5%
கைப் பிடியுடன் கூடிய சாய்வுப் பாதைகள்: 58.2%
மழைநீர் சேகரிப்பு வசதி: 29.9%
