குழந்தைகள் மத்தியிலும் மனச்சிதைவு நோய் அறிகுறி பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகள் மத்தியிலும் மனச்சிதைவு நோய் அறிகுறி பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
UPDATED : செப் 29, 2025 08:21 AM
ADDED : செப் 29, 2025 08:22 AM
மனச்சிதைவு நோய் ஆண்கள், பெண்களுக்கு மட்டுமின்றி, இன்று குழந்தைகள் மத்தியிலும் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
மனச்சிதைவு எனும், 'ஸ்கிசோப்ரினியா' கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக, மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இப்பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மாயத்தோற்றம், பிரமைகள் மற்றும் மிகவும் ஒழுங்கற்ற சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டு, சாதாரண வாழ்க்கையே சவாலாக மாறிவிடுகிறது.
கோவை மாவட்ட மனநல மைய குழுவினர், மனச்சிதைவு நோய் அறிகுறிகள் காரணமாக 500 பேரை, பைபோலர் டிஸ்ஆடர் பிரிவில் 120, குடிப்பழக்கம் என 200, தற்கொலை எண்ணம் வருவதாக 150, எபிலெப்சி பாதிப்புக்காக 400, ஆன்சைட்டி டிஸ்ஆடர் 400, மன அழுத்தம் 250 மற்றும் மனநல குறைபாடு 350 என்ற எண்ணிக்கையில், மாதம் தோறும், சராசரியாக, 2,300 பேருக்கு கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.
இதுபோன்ற அழைப்புகளிலும், வட்டார அளவில் ஆய்வுகளுக்கு செல்லும் போதும், குழந்தைகள் மத்தியில் மனச்சிதைவு நோய் பாதிப்பு அறிகுறி தென்படுவதாக, மனநல டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், மனச்சிதைவு போன்ற பெரிய பாதிப்புகளில் சிக்காமல் தப்பிக்க இயலும்.
இதுகுறித்து, மாவட்ட மனநலத்திட்ட டாக்டர் ஹெலனா செல்வகொடி கூறியதாவது:
மனச்சிதைவு என்பது ஆண்கள் மத்தியில் சற்று அதிகமாக உள்ளது. பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் மத்தியிலும், மனச்சிதைவு நோய் அறிகுறி காணப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மட்டுமே, மனச்சிதைவு நோய் சார்ந்த அறிகுறி மற்றும் பாதிப்பு உள்ளவர்களை 500 பேரை பார்க்கின்றோம்.
தவிர, மனரீதியான பல்வேறு பிரச்னைகளுக்கு சராசரியாக மாத்தோறும், 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றோம். குழந்தை பிறந்தவுடன் தாயின் அன்பு தாயிடம் இருந்தோ, பிறரிடம் இருந்தோ கிடைக்க வேண்டும். பசிக்கும் போது பால் கொடுப்பது, குழந்தைக்கு கிடைக்கும் முதல் நம்பிக்கை.
பசிக்கு தொடர்ந்து அழும் குழந்தைக்கு, உணவு கிடைக்காமல் தொடர்ந்து கத்திக்கொண்டு இருந்தால், நம்பிக்கை உணர்வு ஏற்படாமல் எதிர்காலத்தில் சந்தேக நோயாகவும், மனசிதைவு நோய் ஏற்படவும் வழிவகுக்கும்.
தற்போது, இதற்கான அறிகுறிகளை 5 வயது குழந்தைகளிடம் கூட காண முடிகிறது. மாவட்ட மன நல மையம் சார்பில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்கூட்டியே பரிசோதனை செய்து, அறிகுறி இருப்பின், எதிர்காலத்தில் சிக்கல் எழாமல் தடுக்கவும், கருவில் உள்ள குழந்தைகளை நேர்முறையான எண்ணங்களுடன் பிரசவிப்பது, வளர்ப்பது குறித்து கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
மனச்சிதைவு நோய் என்பது உடனடியாக யாரையும் பாதிப்பது இல்லை. குழந்தை பருவம் முதல் அறிகுறி தோன்றி, எப்போது வேண்டுமானாலும் வெளிப்படும்.பலர் மனநலம் என்றாலே தவறான புரிதலுடன் உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மனச்சிதைவு பாதிப்பு யாருக்கு வர வாய்ப்பு?
''தாய், தந்தை ஒரே விஷயத்தை இரண்டு விதமாக சொல்லி திணிப்பது மற்றும் மிரட்டுவது, தாய் கண்டுகொள்ளாமல் உணர்வை வெளிப்படுத்தாமல் இருப்பது, குடும்பத்தில் அடிக்கடி சண்டை, கூச்சல் ஏற்படுதல், தனிமையை அதிகம் உணரும் குழந்தை, தாயிடம் தெளிவான சிந்தனை இன்மை, தொடர்பு திறன் குறைபாடு இருத்தல், பெற்றோரிடம் உள்ள விரோதத்தை குழந்தைகளிடம் காண்பித்தல், குற்ற உணர்வை துாண்டி விடுதல், பாலியல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சூழல்களில் வளரும் குழந்தைகளுக்கு, எதிர்காலத்தில் மனச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்,'' என்கிறார் டாக் டர் ெஹலனா செல்வகொடி.