மாணவர்களே சேராத 496 பள்ளிகளில் 889 ஆசிரியர்கள் இருப்பது ஏன்?
மாணவர்களே சேராத 496 பள்ளிகளில் 889 ஆசிரியர்கள் இருப்பது ஏன்?
UPDATED : ஜன 05, 2025 12:00 AM
ADDED : ஜன 05, 2025 08:39 AM

சென்னை:
தமிழகத்தில், 2,758 ஓராசிரியர் பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்கள் நியமித்து மேம்படுத்த வேண்டும் என, விடுதலை சிறுத் தைகள் கட்சி பொதுச்செயலர் ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி மற்றும் படிப்பறிவுத் துறை சார்பில், 2023 - 24ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வியில் தமிழக அரசு சிறந்து விளங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், பள்ளிக் கல்வியில் தற்போது முதலிடம் வகிக்கும் கேரளா மாநிலத்தைவிட, நாம் முன்னேற வேண்டும்.
தமிழகத்தில், 2,758 ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில், 80,586 மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு குறைந்தபட்சம், இரண்டு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஒரு மாணவர் கூட சேராத பள்ளிகள், 496 உள்ளன. அந்த பள்ளிகளில், 889 ஆசிரியர்கள் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.
இந்த கவலைக்குரிய நிலை; மாற்றப்பட வேண்டும்.
பட்டியலின மாணவர்களில், 10 சதவீதம் பேர், 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்துகின்றனர். இடைநிற்றலை தடுக்காமல், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாது. இதைக் கருதி, இடைநிற்றல் முற்றிலும் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
பள்ளிகளில் உள்ள நுாலகங்கள், புறக்கணிக்கப்பட்டவையாக உள்ளன. இந்நிலை மாற்றப்படுவதோடு, பள்ளி நுாலகங்களில் நுால்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.