பாராட்டும் புத்தகங்களும் எங்களுக்கு வழங்காதது ஏன்? அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கேள்வி
பாராட்டும் புத்தகங்களும் எங்களுக்கு வழங்காதது ஏன்? அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கேள்வி
UPDATED : ஆக 07, 2025 12:00 AM
ADDED : ஆக 07, 2025 09:38 AM

கோவை:
அரசு பள்ளிகளில் உள்ள நுாலகங்களுக்கு, ஆண்டுதோறும் புத்தகங்கள் வழங்குவதுபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க, அரசு முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் 5,059, நடுநிலை 1,548, உயர்நிலை 629, மேல்நிலை 1,173 என 8,409 பள்ளிகள் செயல்படுகின்றன. 28.44 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பொது அறிவு, நீதிக்கதைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை, ஒவ்வொரு பள்ளிக்கும் அரசு வழங்குகிறது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளிகளுக்கு, 800க்கும் மேற்பட்ட சிறு புத்தகங்களும் வழங்கப்படுகின்றன. தங்கள் மாணவர்களுக்கும், இப்புத்தகங்களை வழங்க வேண்டும் என, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை சலுகைகள், அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். காலை உணவுத் திட்டம், வாசிப்பு இயக்கம் ஆகியவை நீண்ட நாள் கோரிக்கைக்கு பின்னரே, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டன.
அதேபோல், நுாலகங்களுக்கான பொது அறிவு, அறிவியல் புத்தகங்களையும் வழங்க வேண்டும். 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி அளித்த அரசு பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டும் பள்ளி கல்வித்துறை, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களைக் கண்டுகொள்வதில்லை என்றனர்.