1ம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படாதது ஏன்?
1ம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படாதது ஏன்?
UPDATED : அக் 06, 2026 01:36 PM
ADDED : அக் 06, 2026 01:38 PM
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பாண்டில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு, இதுவரை ஒரு செட் சீருடையை கூட, பள்ளிக் கல்வித்துறை வழங்கவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர், கிருஷ்ணகிரி என, இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. அதில், ஓசூர் கல்வி மாவட்டத்தில், 145 அரசு நடுநிலைப் பள்ளிகள், 548 துவக்கப் பள்ளிகள், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 144 நடுநிலைப் பள்ளிகள், 606 துவக்கப் பள்ளிகள் இயங்குகின்றன.
நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் மொத்தம், 16,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேர்க்கை பெறும் மாணவ - மாணவியருக்கு சீருடை, பாடப் புத்தகங்கள் முதல் நாளே 4 செட் சீருடைகள் வழங்கப்படும்.
ஆனால், நடப்பு கல்வியாண்டில், முதல் பருவம் முடிந்து பள்ளிகள் நேற்று திறந்தன. மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால், இதுவரை ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த, 16,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு இதுவரை ஒரு செட் சீருடை கூட வழங்கப்படவில்லை. 2ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியருக்கு, 4 செட் சீருடைகள் வழங்கப்பட்டுவிட்டன. இது, பெற்றோரை அதிருப்தி அடைய செய்துள்ளது.
கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 'கிருஷ்ணகிரி மட்டுமின்றி, தர்மபுரி, சேலம் உட்பட பல மாவட்டங்களில், ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கவில்லை. என்ன பிரச்னை என்பது தெரியவில்லை' என்றனர்.
