இறுதியாண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியது ஏன்? அமைச்சர்கள் விளக்கம்
இறுதியாண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியது ஏன்? அமைச்சர்கள் விளக்கம்
UPDATED : ஜன 24, 2026 04:55 PM
ADDED : ஜன 24, 2026 04:57 PM

சென்னை:
“தொடர்ந்து மேல் படிப்பு படிக்கவும், வேலை வாய்ப்புக்கு பயன்படுத்தவும் தான், கல்லுாரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்பட்டது,” என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார்:
அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட, கல்லுாரி மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, தி.மு.க., அரசு நிறுத்தியது. இப்போது தேர்தல் வருவதால், கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், 'லேப்டாப்' வழங்கியுள்ளது. படிப்பை முடித்து வெளியே செல்வோருக்கு, 'லேப்டாப்' வழங்கி என்ன பயன்?
அமைச்சர் கோவி செழியன்:
முதல் கட்டமாக, கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற மாணவர்களுக்கும் வழங்கப்படும். மேல் படிப்பு படிக்கவும், வேலை வாய்ப்பு பெறவும், 'லேப்டாப்' பயன்படும்.
அமைச்சர் வேலு:
கல்லுாரியில் படித்துக் கொண்டிருப்போருக்கு, அவர்களின் கல்லுாரியிலேயே கம்ப்யூட்டர் ஆய்வகம் உள்ளது. அதை பயன்படுத்தி கற்றுக் கொள்வர். படிப்பை முடித்து செல்லும்போது, எல்லாராலும் 'லேப்டாப்' வாங்க முடியாது. அந்த ஏக்கத்தை போக்கவே, இறுதியாண்டு மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கியுள்ளோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

