மகளிர் கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படுமா; மாணவிகள் எதிர்பார்ப்பு
மகளிர் கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படுமா; மாணவிகள் எதிர்பார்ப்பு
UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 09:50 AM
கோவை:
கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், புதிய இளநிலை பாடப்பிரிவுகள், தற்போதுள்ள இளநிலைக்கான முதுநிலை பாடப்பிரிவுகள் நடப்பாண்டில் துவங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், கல்லுாரி கல்வி இயக்குனரகத்தில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கோவையில் மகளிர் அரசு கல்லுாரி தேவை என்ற, நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து, கடந்த, 2020ம் ஆண்டு முதல், புலியகுளம் பகுதியில் மகளிர் அரசு கல்லுாரி செயல்பட துவங்கியது. கல்லுாரி துவங்கும் போது, பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல் படிப்புகள் மட்டும் துவக்கப்பட்டது.
போதுமான வகுப்பறைகளும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது, 13.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இளநிலை, முதுநிலை படிப்புகள் துவக்குவதற்கான கருத்துரு, சில மாதங்களுக்கு முன்பே, கல்லுாரி கல்வி இயக்குனரகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால், இளநிலை வகுப்புகள் துவங்கி, இன்டர்னல் தேர்வுகள் துவங்கவுள்ள சூழலில், இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மாணவி வனிதா கூறுகையில், எங்கள் கல்லுாரியில் இளநிலை முடித்துள்ளோம். தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ள சூழலில், இத்துறைகளுக்கு முதுநிலை படிப்புகளை துவங்கினால் வசதியாக இருக்கும் என்றார்.