தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா; தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா; தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பு
UPDATED : மே 23, 2025 12:00 AM
ADDED : மே 23, 2025 05:36 PM

சென்னை:
தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதை தொடக்கக்கல்வி இயக்ககம் உறுதிப்படுத்தி உள்ளது.
வெயில் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போகலாம் என்ற பேச்சுகள் எழுந்தன. அதற்கு பதிலளித்த அமைச்சர் மகேஷ், நிலவரத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
தற்போது தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளுமையான நிலை காணப்படுகிறது.
இந் நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும், திட்டமிட்ட படி ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து, ஜூன் 2 முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜூன் 2 முதல் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக்கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.