விருதுநகரில் அரசு பல் மருத்துவக்கல்லுாரி அமையுமா? நிலம் தேர்வாகியும் பணிகள் துவங்கவில்லை
விருதுநகரில் அரசு பல் மருத்துவக்கல்லுாரி அமையுமா? நிலம் தேர்வாகியும் பணிகள் துவங்கவில்லை
UPDATED : ஆக 22, 2024 12:00 AM
ADDED : ஆக 22, 2024 08:55 AM

விருதுநகர்:
தமிழகத்தில் 2009ம் ஆண்டு முதல்வராக கருணாநிதி இருந்த போது விருதுநகரில் அரசு பல் மருத்துவக்கல்லுாரி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
அதன் பின்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தென் மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லுாரி துவங்கப்படும் என அறிவித்தார். அவரது மறைவிற்கு பின் 2017ல் முதல்வராக இருந்து பழனிசாமி விருதுநகரில் பல் மருத்துவக்கல்லுாரி அமைக்க ஒப்புதல் அளித்து முதல் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்தார். இதற்காக இடம் தேர்வு செய்யும் பணியும் உடனடியாக நடந்தது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி அருகே பல் மருத்துவக்கல்லுாரி அமைக்க 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. அரசு பல் மருத்துவக்கல்லுரிக்கான சிறப்பு அலுவலராக சென்னை பல் மருத்துவக்கல்லுாரி பேராசிரியர் ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் இதுவரை பல் மருத்துவக்கல்லுாரி கட்டுமானப்பணிகள் துவங்கப்படவில்லை. காலிநிலமாகவே உள்ளது.
தற்போது தமிழகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லுாரி சென்னையில் மட்டுமே உள்ளது. தென் மாவட்ட மக்கள், மாணவர்களின் நலனிற்காக விருதுநகரில் அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக்கல்லுாரி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அறிவிக்கப்பட்டு நிலம் ஒதுக்கப்பட்ட திட்டத்தை 3 ஆண்டுகளாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அரசு பல் மருத்துவக்கல்லுாரியை ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பாக சட்டசபையில் கோரிக்கை வைக்க வேண்டும்.