பாரம்பரிய மர சீர்வரிசை பொருட்கள் தயாரிப்பு புத்துயிர் பெறுமா!
பாரம்பரிய மர சீர்வரிசை பொருட்கள் தயாரிப்பு புத்துயிர் பெறுமா!
UPDATED : ஏப் 20, 2024 12:00 AM
ADDED : ஏப் 20, 2024 11:17 AM

காரைக்குடி:
தமிழகத்தில் திருமண நிகழ்ச்சி என்றாலே அனைவரின் பார்வையும் செல்வது சீர்வரிசை பொருட்களில் தான். பெண் வீட்டாரின் செல்வாக்கையும், மகள் மீது பெற்றோர் வைத்திருக்கும் பேரன்பையும் வெளிக்காட்டும் பிம்பமாகவே சீர்வரிசை பொருட்கள் விளங்கும்.
தற்போதை நவநாகரீக உலகில் சீர்வரிசை பொருட்கள் என்றால், கட்டில், பீரோ வாஷிங் மெஷின் ஏ.சி., கார், பைக் மட்டுமின்றி வீடுகள் தோட்டங்கள் உட்பட கூட இடம் பிடித்து விட்டது. ஆனால் அன்றைய காலத்தில், தங்களின் மகள் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை ஒரு குழந்தை பிறந்தநாள் முதலே சேகரிக்க தொடங்குவர். அதில் முக்கிய இடம் பிடித்தது மரச் சீர்வரிசை பொருட்களே. மர பீரோக்கள், கட்டில்கள் மட்டுமின்றி சமையலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டி முதல் அத்தனை பொருட்களும் சீர்வரிசையை அலங்கரிக்கும்.
இதனை அறிந்து காரைக்குடி பகுதியில் மரச் சீர்வரிசை பொருட்கள்தயாரிக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வந்தனர். இத்தொழிலை நம்பி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தன. தேக்கு, வேம்பு. நாட்டு மரம் கருவேல மரம் என பலவகை மரங்களில் தயாராகும் பொருட்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது.
ஆனால் தற்போது பிளாஸ்டிக், உலோக பொருட்கள் வரத்து காரணமாக மரச் சீர்வரிசை பொருட்கள் தயாரிப்பு குறைந்து விட்டது. பாரம்பரிய உணவு, பாரம்பரிய விளையாட்டு வரிசையில், பாரம்பரிய மரச் சீர்வரிசை பொருட்களும் மீண்டும்புத்துயிர் பெறுமா என்ற எதிர்பார்ப்பு தொழிலாளர்களிடையே எழுந்துஉள்ளது.
உட்டன் ஒர்க்ஸ் உரிமையாளர் மோகன் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். பழைய செட்டிநாட்டு பங்களாக்களில் இருந்து கிடைக்கும் பர்மா தேக்கு, வேம்பு, காட்டு மரம், கருவேல மரங்கள் மூலம் அரிவாள்மனை, இடியாப்பக்கட்டை, மர ஸ்டூல், பல்லாங்குழி, அஞ்சறைப் பெட்டி, குழந்தைகள் கை வண்டி உட்பட 40-க்கும் மேற்பட்ட மரச் சீர்வரிசை பொருட்கள் தயார் செய்து வந்தோம்.
காரைக்குடி, தேவ கோட்டை, புதுக் கோட்டை, சிவகங்கை, மேலுார், மதகுபட்டி, புதுவயல் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் பொருட்களை வழங்கி வருகிறோம்.
இடியாப்ப கட்டை ரூ.140ல் இருந்து ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் பொருள் மோகத்தால் மர சாமான்கள் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் இத்தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மரச்சீர் வரிசை பொருள் உற்பத்தி தொழிலை மேம்படுத்த உதவ வேண்டும்.