கிரிக்கெட்டிற்காக ஐ.டி., வேலையை விட்ட பெண்கள் அணி பயிற்சியாளர்
கிரிக்கெட்டிற்காக ஐ.டி., வேலையை விட்ட பெண்கள் அணி பயிற்சியாளர்
UPDATED : மார் 03, 2025 12:00 AM
ADDED : மார் 03, 2025 10:05 AM
பெலகாவி:
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் விளையாட்டாக கிரிக்கெட் இன்று உள்ளது. ஆண்களால் மட்டுமே கிரிக்கெட் விளையாட முடியும் என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது.
தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் கிரிக்கெட்டில் ஜொலித்து வருகின்றனர். விளையாட்டு வீரர்கள் அடிக்கும் சிக்சர் போன்று வீராங்கனையரும் சர்வ சாதாரணமாக சிக்சர் அடிக்க ஆரம்பித்துஉள்ளனர்.
உலகக்கோப்பை
இதனால் பெண்கள் விளையாடும் கிரிக்கெட்டிற்கும், ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து கொண்டு செல்கிறது. இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாம்பூரில் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கான, உலகக் கோப்பை போட்டி கடந்த மாதம் துவங்கியது.
இம்மாதம் 2 ம் தேதி நடந்த இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி, இந்திய அணி வெற்றி பெற்றது. பொதுவாக ஒரு அணியின் வெற்றிக்கு பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர் மற்ற ஊழியர்கள் பங்கு முக்கியமாக இருக்கும்.
அதுபோல இந்திய பெண்கள் அணி வென்றதற்கும், பயிற்சியாளர் குழுவில் இருந்த ஒருவர் முக்கியமாக இருந்தார். அவர் கர்நாடகாவை சேர்ந்தவர். அவர் யார் என்று பார்ப்போமா.
தீராத காதல்
பெண்கள் அணியின் த்ரோ பால் ஸ்பெஷலிஸ்டாக இருப்பவர் குருபிரசாத் கோதிவாலே, 32. பெலகாவியின் சிக்கோடியை சேர்ந்தவர். பேட்டிங்கில் ஜொலிக்கும் வீராங்கனைநாருக்கு பயிற்சியின் போது, த்ரோ பால் வீசி பயிற்சி அளிப்பதில் கில்லாடி. இவரது கிரிக்கெட் பயணம் சாதாரணமாக அமையவில்லை. நிறைய கஷ்டங்களை அனுபவித்து வந்து உள்ளார்.
சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது குருபிரசாத்திற்கு தீராத காதல். எந்த நேரம் பார்த்தாலும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டே இருப்பார். நன்கு படித்து ஏதாவது நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று பெற்றோரின் அறிவுரை ஒரு பக்கம். ஆனாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் அவருக்கு குறையவில்லை.
கிரிக்கெட்டுடன் சேர்த்து படிப்பில் கவனம் செலுத்தினார். கல்லுாரி முடித்த பின், பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார். ஆனாலும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் வேலையை விட்டுவிட்டு, கிரிக்கெட் அகாடமி ஒன்றில், த்ரோ பால் பயிற்சியாளராக பணிக்கு சேர்ந்தார். சம்பளம் குறைவு என்றாலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இதனால்அவருக்கு இந்திய மகளிர் அணியின் த்ரோ பால் பயிற்சியாளர் பதவி கிடைத்தது. பயிற்சியாளராக இருந்தாலும் ஓய்வு நேரத்தில் சிக்கோடிக்கு வரும்போது, கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.