UPDATED : ஏப் 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: அடுத்த கல்வியாண்டில் முதல் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரியின் மீது நடந்த விவாதத்தின்போது, தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துப் பேசியதாவது:
அருகாமை பள்ளி முறை தொடர்பாக கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு கருத்துக் கேட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு தனது கருத்தைத் தெரிவித்துள்ளது. மத்திய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படும்போது இதை பரிசீலனை செய்யலாம். சமச்சீர் கல்வியை பொறுத்தவரை, தமிழகத்தில் நான்கு வகையான பாடத்திட்டங்கள் உள்ளன. அவற்றை இணைத்து தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் என்ற ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். இதற்காக முத்துகுமரன் கமிட்டியும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார் தலைமையிலான குழுவும் விரிவான அறிக்கையை அளித்துள்ளன. தேர்வு வாரியம் தனியாக உள்ளது. அதையும் இதனுடன் இணைக்க வேண்டும்.
எனவே, வரும் கல்வியாண்டில் இத்திட்டத்தை அறிவித்தாலும், பாடத்திட்டம் தயாரித்தல், புத்தகம் அச்சிடுதல் போன்ற பணிகளை முடிக்க தாமதமாகும். எனவே, அடுத்த கல்வியாண்டில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை கொண்டுவர முயற்சிக்கப்படும். இந்த கல்வி முறையைக் கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது என்றார் தங்கம் தென்னரசு.