யுவநிதி பிளஸ் பெயர் மாற்றம் செய்ய முடிவு; வேலைவாய்ப்பு பயிற்சியுடன் உதவித்தொகை
யுவநிதி பிளஸ் பெயர் மாற்றம் செய்ய முடிவு; வேலைவாய்ப்பு பயிற்சியுடன் உதவித்தொகை
UPDATED : ஆக 14, 2024 12:00 AM
ADDED : ஆக 14, 2024 04:10 PM
பெங்களூரு:
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும், யுவநிதி திட்டத்தின் பெயரை, யுவநிதி பிளஸ் என மாற்றம் செய்து, உதவித்தொகையுடன், பயிற்சியும் அளிக்க, கர்நாடகா அரசு ஆலோசித்து வருகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும், தேர்தலில் அளித்த ஐந்து வாக்குறுதியில், நான்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.
ஐந்தாவது வாக்குறுதியான பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு, முறையே மாதந்தோறும் 3,000 ரூபாய், 1,500 ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்திருந்தது. இதற்கான துவக்க விழா, ஜனவரியில் நடந்தது.
இத்திட்டத்தின் மூலம், இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் டிபாசிட் செய்யப்படும். இத்திட்டத்தின் பெயரான யுவநிதி இனிமேல் யுவநிதி பிளஸ் என பெயர் மாற்றம் செய்ய வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செய்துள்ளது.
வேலை இல்லாதோருக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி., பி.டி., நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அரசு பேசி வருகிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில், பெயர் மாற்றப்பட்ட திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்புக்கான பயிற்சி அளிப்பதுடன், மாதந்தோறும் உதவித்தொகையும் வழங்கும்.
ஆனால், இதுவரை பதிவு செய்த யாருக்கும் உதவித்தொகை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.