குருப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு மண்டல அளவிலான மாதிரி தேர்வு
குருப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு மண்டல அளவிலான மாதிரி தேர்வு
UPDATED : ஜன 08, 2026 10:34 AM
ADDED : ஜன 08, 2026 10:38 AM

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, மற்றும் 2ஏ முதன்மை தேர்வுக்கான மண்டல அளவிலான மாதிரி தேர்வில் பங்கேற்போர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
கடந்த 2025ம் ஆண்டு செப். 28 அன்று நடந்த பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக முதன்மை தேர்விற்கு மண்டல அளவிலான மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இம்மாதிரித்தேர்வுகள் ஜன., 9 துவங்கி ஜன., 13, 20, 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இத்தேர்வுகள் நடக்கிறது.
மாதிரித் தேர்வுகள் சேலம் மண்டலத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களால் வடிவமைக்கப்பட்ட வினாத்தாள்களை கொண்டு முழுப்பாட திட்டத்திற்கு நடத்தப்படும். இத்தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு பதிவு செய்யலாம்.
பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரித் தேர்வில் கலந்து கொள்பவர்கள் இன்று 7ம் தேதிக்குள், தங்களின் விவரத்தினை தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04151-295422 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

