பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதல்; சத்தீஸ்கரில் 10 பேர் பலி
பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதல்; சத்தீஸ்கரில் 10 பேர் பலி
ADDED : நவ 04, 2025 05:30 PM

பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதிய கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
பிலாஸ்பூர் மாவட்டம், ஜெய்ராம் நகர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் லால்காதன் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. கோர்பா பயணிகள் ரயிலும், அதே வழித்தடத்தில் வந்த சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் பேசுகையில், முதலில் பலத்த சத்தம் கேட்டது. அதன் பின்னர் பலர் கூக்குரல் இடும் சத்தமும், அலறலும் கேட்டது. உடனே நாங்கள் விபத்து நிகழ்ந்த பகுதிக்குச் சென்றோம் என்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர், ரயில்வே ஊழியர்களுடன் மருத்துவக் குழுவினரும் சென்றுள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
விபத்தில் சிக்கிய பயணிகள் ரயிலில் கூட்டம் நிரம்பி காணப்பட்டதால் பலி எண்ணிக்கை உயரும் என்று தெரிகிறது. மேலும், விபத்து நிகழ்ந்த வழித்தடத்தில் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று வழித்தடத்தில் ரயில்களை இயக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

