பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு வேலை பார்த்த 10 பேர் பஞ்சாபில் கைது: தாக்குதல் திட்டத்தை முறியடித்த போலீசார்
பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு வேலை பார்த்த 10 பேர் பஞ்சாபில் கைது: தாக்குதல் திட்டத்தை முறியடித்த போலீசார்
UPDATED : நவ 13, 2025 07:26 PM
ADDED : நவ 13, 2025 06:25 PM

சண்டிகர்: பஞ்சாபில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் சதி முறியடிக்கப்பட்டது. அந்த அமைப்புக்கு வேலை பார்த்த 10 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
டில்லி செங்கோட்டையில் கடந்த 10ம் தேதி பயங்கரவாதிகள் காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பஞ்சாபில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட சதியை போலீசார் முறியடித்துள்ளனர்.
இது தொடர்பாக லூதியானா போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முக்கிய திருப்பமாக, கையெறி குண்டுகளை வீசி தாக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ திட்டத்தை லூதியானா போலீசார் முறியடித்துள்ளனர். இந்த விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஎஸ்ஐ அமைப்பினருக்காக மலேஷியாவில் இருந்து செயல்பட்ட 3 பேருடன் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் மூலம் கையெறி குண்டுகளை பறிமுதல் செய்தனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கையெறி குண்டுகளை வீசி, மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பணி கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. பஞ்சாபில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவதற்கு பயங்கரவாதிகளையும், எல்லை தாண்டிய பயங்கரவாத நெட்வொர்க்குகளையும் முறியடிக்க பஞ்சாப் போலீசார் உறுதிபூண்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

