இந்தியாவில் 10,500 மருந்து தொழிற்சாலைகள்; 1,467 ஆய்வாளர்களால் கண்காணிக்க முடியாத நிலை
இந்தியாவில் 10,500 மருந்து தொழிற்சாலைகள்; 1,467 ஆய்வாளர்களால் கண்காணிக்க முடியாத நிலை
ADDED : அக் 14, 2025 12:53 AM

சென்னை: இந்தியாவில் 10,500 தொழிற்சாலைகள் உள்ள நிலையில், அவற்றை கண்காணிக்கவும், அனுமதி அளிக்கவும், 1,467 மருந்து ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களால், அனைத்து தொழிற்சாலைகளையும் கண்காணிக்க முடியாத நிலை உள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து சாப்பிட்ட 26 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இம்மருந்து, காஞ்சிபுரத்தில் உள்ள, 'ஸ்ரீசன் பார்மசியூட்டிகல்' நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது.
இந்த தொழிற்சாலையில் மத்திய, மாநில அரசுகள் இரண்டு ஆண்டுகளாக சோதனை செய்யாமல் இருந்ததால், அந்நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டை அரங்கேற்றியுள்ளது.
இந்நிலையில், நாடு முழுதும் உள்ள மருந்து நிறுவனங்களில், பெரும்பாலும் முறையாக சோதனை நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு, மருந்து ஆய்வாளர்கள் பற்றாக்குறையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவில் 3,000 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களுக்கு, 10,500 மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றை மேற்பார்வையிட, 1,467 மருந்து ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
தமிழகத்தில் 112 மருந்து ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களை வைத்து, அனைத்து மருந்து தொழிற்சாலைகளையும் அடிக்கடி ஆய்வு செய்ய முடியாத நிலை உள்ளது.
இது குறித்து, மருந்து வல்லுனர்கள் கூறியதாவது:
இந்தியாவை பொறுத்தவரை, மருந்து உற்பத்திக்கான உரிமங்கள், மாநில அதிகாரிகளால் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு தர நிலைகளை அமைத்து ஏற்றுமதிகளை கையாள்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு ஆய்வு பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கும்; வெளிநாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும்.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து ஆய்வு நடத்துவதில்லை. இதற்கு, அரசியல் உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.
இந்தியாவில் 3,500 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு மட்டுமே, உலக சுகாதார நிறுவன அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 4,080 மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.
அவற்றை கண்காணிக்க, விஞ்ஞானிகள், மருந்து ஆய்வாளர்கள், நிர்வாகிகள் என, 18,000 பேர் பணியில் உள்ளனர். இந்தியாவை விட, பல மடங்கு அதிகமான பணியாளர்களை வைத்து, மக்களின் உயிர் பாதுகாப்பில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது. ஒரு தவறு நடந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டங்கள் அங்கு உள்ளன.
அதேபோல, இந்தியாவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மருந்துகள் மட்டுமே, மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படுகின்றன. அதில், தரம் உறுதி செய்யப்பட்ட பின், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
ஆனால், உள்நாடுகளில் தயாரித்து விற்பனையாகும் மருந்துகள் முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை.
ஒரு நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை, மத்திய, மாநில அரசுகள் பரிசோதிக்க தவறியதால், 26 குழந்தைகள் இறந்துள்ளன.
இந்தியாவில் மருந்து ஆய்வாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், கண்காணிப்பதற்கான ஒழுங்கு முறை திட்டத்தை வகுத்தால் மட்டுமே, இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
இவற்றை மத்திய அரசு செயல்படுத்தாத வரை, இது போன்ற துயர சம்பவம் நடந்து கொண்டு தான் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுவரை பாதிப்புகள்
* கடந்த 2020ல் ஜம்மு - காஷ்மீரில், தரமற்ற இருமல் மருந்து காரணமாக 11 குழந்தைகள் உயிரிழந்தன. இந்த மருந்து, ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம், தமிழகம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களிலும் விற்பனையில் இருந்தது
* 2022ம் ஆண்டில் காம்பியாவில், 70க்கும் அதிகமான குழந்தைகள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் இறந்தன
* 2019 - 2020ம் ஆண்டுகளில், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள், ஜம்மு காஷ்மீரில் 12 குழந்தைகள் இறந்தன
* 2024ல் கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்ட மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியருக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட திரவ மருந்தால், 34 கர்ப்பிணியர் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் உயிரிழந்தனர்
* 2025ல் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், 'கோல்ட்ரிப்' மருந்து சாப்பிட்ட 26 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.