பிலிப்பைன்ஸில் புயலால் 114 பேர் பலி: தேசிய பேரிடராக அறிவிப்பு
பிலிப்பைன்ஸில் புயலால் 114 பேர் பலி: தேசிய பேரிடராக அறிவிப்பு
ADDED : நவ 06, 2025 08:46 PM

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை கல்மேகி சூறாவளி புயல் கடுமையாக தாக்கியதில், இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர். பேரழிவுகளை தொடர்ந்து தேசிய பேரிடராக பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் அறிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் கல்மேகி (Kalmegi) சூறாவளி தாக்கியது. சூறாவளியோடு, திடீர் வெள்ளமும் ஏற்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஏராளமான கார்கள், டூவீலர்கள் முற்றிலும் மூழ்கின.
தெற்கு லெயிடின் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. செபு மாகாணமும் பலத்த சேதத்தை சந்தித்தது. 'கல்மேகி' புயல், தற்போது அதிகரித்து வரும் காற்றின் வேகத்துடன் மத்திய வியட்நாமை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கல்மேகி இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாகும்.
கடலோரம் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வியட்நாமின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் காரணமாக 8 மீ (26 அடி) வரை அலைகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆறு விமான நிலையங்கள் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வியட்நாமின் துணைப் பிரதமர் டிரான் ஹாங் ஹா, கல்மேகி மிகவும் அசாதாரணமான புயல். அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் புயல், அதிக மக்கள் தொகை கொண்ட தீவான செபுவில் உள்ள முழு நகரங்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது, இதுவரை மொத்தம் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 127 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது மழை முற்றிலுமாக நின்று விட்டது, வெயில் அடிக்கிறது, ஆனால் எங்கள் வீடுகள் இன்னும் சேற்றால் நிரம்பியுள்ளன, உள்ளே எல்லாம் இடிந்து கிடக்கிறது,' என்று பிலிப்பைன்ஸில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸில் வசித்த 5 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர். கடும் பேரழிவு ஏற்பட்டதை அடுத்து தேசிய பேரிடராக பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ் அறிவித்து உள்ளார்.

