சத்தீஸ்கரில் 10 பெண்கள் உள்ளிட்ட 27 நக்சல்கள் சரண்
சத்தீஸ்கரில் 10 பெண்கள் உள்ளிட்ட 27 நக்சல்கள் சரண்
ADDED : அக் 15, 2025 06:00 PM

சுக்மா: சத்தீஸ்கரில் 10 பெண்கள் உள்ளிட்ட 27 நக்சலைட்டுகள் இன்று பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தனர்.
நாட்டின் வெவ்வேறு மாநிலங்களை சீரழித்து வந்த நக்சல்களை 2026 மார்ச் 31ம் தேதிக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதன்படி நக்சல் வேட்டை முழு வீச்சில் நடக்கிறது. முக்கிய தலைவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். அரசு படையினரின் தீவிர செயல்பாடுகள் காரணமாக, நக்சல்கள் தொடர்ந்து சரண் அடைந்து வருகின்றனர்.
மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் மூத்த நக்சலைட் மல்லோஜுலா வேணுகோபால் ராவ் என்ற பூபதி மற்றும் 60 பேர் ஆயுதங்களை நேற்று ஒப்படைத்தனர்.
இன்று சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 27 நக்சல்கள் சரண் அடைந்தனர். சரண் அடைந்தவர்களில் 16 பேர், மாவோயிஸ்ட் அமைப்பில் முக்கிய புள்ளிகள். அவர்களை பற்றிய துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டவர்கள்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கிரண் சவான் கூறுகையில், ''இன்று சரணடைந்த 27 நக்சலைட்டுகளில் 10 பெண்கள் அடங்குவர். அவர்கள் இங்குள்ள மூத்த காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் முன் சரணடைந்தனர்,'' என்றார்.