42 நாட்கள்; 52 லட்சம் வாகனங்கள்: பண்டிகை கால 'விறுவிறு' விற்பனை
42 நாட்கள்; 52 லட்சம் வாகனங்கள்: பண்டிகை கால 'விறுவிறு' விற்பனை
UPDATED : நவ 08, 2025 08:37 AM
ADDED : நவ 08, 2025 08:36 AM

புதுடில்லி: நடப்பாண்டு பண்டிகை காலத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 52 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வாகன விற்பனை முகவர்கள் சங்கமான 'படா' தெரிவித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டு தசரா துவங்கி, தீபாவளிக்கு பின் இரு வாரங்கள் வரை, 42 நாள் பண்டிகை காலத்தில், அனைத்து பிரிவு வாகனங்களின் சில்லரை விற்பனையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் வாகன துறைக்கு இது ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.
ஜி.எஸ்.டி., குறைப்பால் வாகனங்களின் விலை குறைந்ததே, இதற்கு முக்கிய காரணம். இதனால், நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து வாகன விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சில மாடல் கார்களின் வினியோகத்தை காட்டிலும் தேவை அதிகமாக இருந்ததாக முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் அமலாகும் வரை பொதுமக்கள் காத்திருந்ததால், கடந்த செப்டம்பர் மாதத்தின் முதல் 21 நாட்களில் விற்பனை மந்தமாகவே இருந்தது. விலை குறைப்பு அமலானதும், விற்பனை அதிகரித்தது.
இதனால், கடந்த மாதம் பயணியர் கார் மற்றும் இரு சக்கர வாகன விற்பனை வரலாறு காணாத உச்சத்தை எட்டின. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

