காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் பலி; போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் அமல்
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் பலி; போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் அமல்
ADDED : அக் 20, 2025 06:50 AM

ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் போர்நிறுத்தத்தை அமல்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் மொழிந்த அமைதி திட்டத்தின் படி தற்போது அங்கு போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருப்பினும், ஹமாஸ் மற்றும் அவர்களை எதிர்க்கும் சில குழுக்கள் இடையே மோதல் எழுந்து வருகிறது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியதற்கு பதிலளிக்கும் விதமாக, காசா பகுதி முழுவதும், ஹமாஸ் படையினர் பதுங்கியிருந்த 10க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை அனுப்புவதை நிறுத்திவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மீண்டும் அமல்!
இது குறித்து, இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹமாஸின் மீறல்களுக்கு பதிலளிக்கும் விதமாக தாக்குதல்களை நடத்தினோம். தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்க, இஸ்ரேல் பாதுகாப்பு படை போர்நிறுத்தத்தை மீண்டும் அமல்படுத்தத் தொடங்கி உள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு படை கடைபிடிக்கும்.
ஹமாஸ் படையினர் எந்த மீறலில், ஈடுபட்டால் நாங்கள் கடும் பதிலடி கொடுப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.