5 மணி நேரத்தில் 5 செ.மீ., மழை: மும்பையை புரட்டி போட்டது
5 மணி நேரத்தில் 5 செ.மீ., மழை: மும்பையை புரட்டி போட்டது
ADDED : செப் 28, 2025 11:29 PM

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் நள்ளிரவு துவங்கி விடிய விடிய கொட்டிய மழையால் சாலைகள் வெள்ளக்காடான நிலையில், உடனடியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையால் பேரிழப்பு தவிர்க்கப்பட்டது.
மஹாராஷ்டிராவில் மும்பை, தானே உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று மதியம் 1:00 மணி வரை கொட்டியது.
நள்ளிரவு துவங்கி நேற்று காலை 8:00 மணி வரை, கொலாபாவில் 12 செ.மீ., மழையும், சாண்டா க்ரூசில் 9 செ.மீ., மழையும் பதிவானது. அதேபோல், நேற்று காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை 5 செ.மீ., மழை பதிவானது.
சில இடங்களில், 5 மணி நேரத்தில், 5 செ.மீ., மழை பெய்தது. இதனால், நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாகின. உடனடியாக மும்பை மாநகராட்சி ஊழியர்கள் தேங்கிய நீரை அகற்றினர்.
ஹிண்ட்மாதா, காந்தி மார்க்கெட், சுனாபட்டி, மலாட், தஹிசர் மற்றும் மன்குர்ட் சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீரும் பம்பு செட்கள் வைத்து அகற்றப்பட்டன.
இதனால், பஸ் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பு பாதைகளில் தேங்கிய நீரும், ரயில்வே ஊழியர்களால் அகற்றப்பட்டது. கனமழை காரணமாக புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இதற்கிடையே, மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட இடங்களில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.