5.2 கிலோ எடையில் பிறந்த 'பிள்ளையார்' குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்
5.2 கிலோ எடையில் பிறந்த 'பிள்ளையார்' குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்
ADDED : செப் 05, 2025 04:04 PM

ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு; ஜபல்பூரைச் சேர்ந்தவர் சுபாங்கி யாதவ். கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்காக அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 5.2 கிலோ ஆக இருந்ததை கண்டு மருத்துவமனை நிர்வாகமே ஆச்சரியம் அடைந்தது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது;
வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 எடை என்ற அளவில் தான் பிறக்கும். இந்த மருத்துவமனையிலும் அப்படித்தான் இதுவரை நிகழ்ந்துள்ளது. ஆனால் முதல் முறையாக, 5.2 கிலோ எடையில் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியமே.
கர்ப்பகாலத்தில் அந்த பெண், எடுத்துக் கொண்ட உணவுமுறைகளே குழந்தையின் எடை 5.2 ஆக அதிகரிக்க காரணமாக இருக்கலாம். சிசேரியன் ஆபரேஷன் எங்களுக்கு சவாலாக இருந்தது. குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர்.
இவ்வாறு மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.
எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்துள்ளார் என்று குழந்தையின் தாய் சுபாங்கி யாதவும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக எடையில் குழந்தை பிறந்துள்ளதால் இருவரையும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.