கிரானைட் வீரமணி வீட்டில் 55 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
கிரானைட் வீரமணி வீட்டில் 55 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
ADDED : அக் 13, 2026 03:03 AM

சென்னை: சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக கைதாகி உள்ள, 'கிரானைட்' வீரமணி(85), வீட்டில், 55 ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
'கிரானைட்' வீரமணி என்பவர், சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக, 'போக்சோ' வழக்குகளில் கைதாகி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றத்திற்கு உடந்தையாக இருந்த வீரமணியின் தோழி சாந்தி, 61, இவரது கணவர் மகேந்திர சிம்ஹன், 63 உட்பட, ஆறு பேரும் கைதாகி உள்ளனர்.
வீரமணி மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில், மதுரை மாவட்ட போலீசாருடன் இணைந்து, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, குற்றம் தொடர்பாக, 55 ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
போலீசார் கூறியதாவது: சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படும் வீரமணி வீட்டில் இருந்து, ஏற்கனவே ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. சில தினங்களுக்கு முன், அவரின் கார் ஓட்டுனர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், வீரமணி வீட்டில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில், 55 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
