வங்கதேச வன்முறையில் ஹிந்து இளைஞர் எரித்து கொலை: 7 பேர் கைது
வங்கதேச வன்முறையில் ஹிந்து இளைஞர் எரித்து கொலை: 7 பேர் கைது
ADDED : டிச 20, 2025 01:23 PM

டாக்கா: வங்கதேச வன்முறையில் ஹிந்து இளைஞர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, 7 பேர் கைது செய்யப்பட்டனர் என அந்நாட்டு இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சமீபத்தில் சுடப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, சிகிச்சை பலனின்றி இறந்ததை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது.
மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ், 30, என்ற இளைஞர் முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசியதாக கூறி, ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்கியது.
இதில் அவர் உயிரிழந்தார். அப்போதும் விடாத காட்டுமிராண்டி கும்பல் சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர். ''ஹிந்துக்கள் மீதான இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளன. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது'' என்று இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் எச்சரித்து இருந்தார்.
7 பேர் கைது
இந்நிலையில் இன்று (டிசம்பர் 20) இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஹிந்து இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில், முகமது லிமோன், முகமது தாரெக், முகமது மாணிக், எர்ஷாத் அலி, நிஜாம் உதின், ஆலோம்கீர், முகமது மிராஜ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இந்த நபர்கள் கைதாகினர். இவ்வாறு அவர் கூறினார்.
சோகமான சம்பவம்
இந்த வன்முறை சம்பவம் குறித்து, காங்கிரஸ் எம்பி சசி தரூர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''வங்கதேசம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைக்கு மத்தியில், தாங்க முடியாத ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சொல்லொணா கொடூரக் குற்றவாளிகளின் கைகளில் சிக்கி, ஹிந்து இளைஞர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் அதே வேளையில், வங்கதேச அரசு விடுத்துள்ள கண்டனத்தைப் பாராட்டுகிறேன். ஆனால், கொலையாளிகளைத் தண்டிக்க அவர்கள் என்ன செய்கிறார்கள், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

