அமெரிக்காவில் 12ம் வகுப்பு படிக்கும் 78% மாணவர்கள் கணிதத்தில் சிரமப்படுகிறார்கள்; விவேக் ராமசாமி வேதனை
அமெரிக்காவில் 12ம் வகுப்பு படிக்கும் 78% மாணவர்கள் கணிதத்தில் சிரமப்படுகிறார்கள்; விவேக் ராமசாமி வேதனை
UPDATED : நவ 25, 2025 06:26 PM
ADDED : நவ 25, 2025 04:55 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் 12ம் வகுப்பு படிக்கும் 78% மாணவர்கள் கணிதத்தில் சிரமப்படுகிறார்கள். அவர்களால் கணித பாடத்தில் தேர்ச்சி அடைய முடியவில்லை என ஓஹியோ மாநில கவர்னர் தேர்தல் வேட்பாளர் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
ஓஹியோ கவர்னர் தேர்தலில் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்க பள்ளி மாணவர்கள் நிலை பற்றிய புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 78% பேர் கணிதத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பதைக் காட்டும் அமெரிக்க அரசு தரவுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். 12ம் வகுப்பு மாணவர்களில் 22% பேர் மட்டுமே கணிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விவேக் ராமசாமி கூறுகையில், 'சீன மாணவர்கள் அமெரிக்கர்களை விட நான்கு ஆண்டுகள் முன்னால் இருக்கின்றனர். இது உண்மை. இப்போது இதை சரிசெய்ய வேண்டியது மாநிலங்களின் பொறுப்பாகும்'' என்றார்.
அமெரிக்க கல்வியின் தற்போதைய நிலை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட விவேக் ராமசாமிக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது மிகவும் முக்கியமான விஷயம். இதற்கு தீர்வு காண, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கல்வித் தரம் குறைந்து வருவது குறித்த விமர்சனங்கள் மற்றும் விவாதங்களுக்கு மத்தியில், அரசு தலைமையிலான சீர்திருத்தங்களையும் ராமசாமி வலியுறுத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
யார் இந்த விவேக் ராமசாமி?
* விவேக் ராமசாமிக்கு வயது 40. இவரது பெற்றோர், கேரளா, பாலக்காடு மாவட்டத்தில் இருந்து அமெரிக்காவின் சின்சினாட்டியில் குடியேறினர்.
* இவர் ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, பிறகு அதில் இருந்து பின்வாங்கினார்.
* விவேக் ராமசாமி தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் அபூர்வா திவாரியை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

