ஒரு குடும்பம் பிழைப்பதற்கு சுரண்டப்படும் 8 கோடி பேர்: திமுகவை விமர்சிக்கும் இபிஎஸ்
ஒரு குடும்பம் பிழைப்பதற்கு சுரண்டப்படும் 8 கோடி பேர்: திமுகவை விமர்சிக்கும் இபிஎஸ்
ADDED : செப் 08, 2025 02:25 AM

நிலக்கோட்டை: 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தன் பிரசாரத்தை, நேற்று நிலக்கோட்டையில் மேற்கொண்டார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.
அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்த 51 மாதங்களில் மக்கள் நலனுக்கான திட்டங்கள் எதையுமே நிறைவேற்றவில்லை. ஆனால், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 25,000, 50,000 ரூபாய், 1 சவரன் தங்கம் அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்தோம்.
இப்படி பத்தாண்டுகளில், 12 லட்சம் பேருக்கு கொடுத்தோம். அதையும், தி.மு.க., அரசு நிறுத்தியது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அத்திட்டத்தைத் தொடருவோம்.
ஏழை, விவசாயத் தொழிலாளிகள், தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் போதும். அதில், கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 350 கோடி ரூபாயில் அமைத்துக் கொடுத்தோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அதில், தாங்கள் செய்தது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி, அதை திறந்தனர்.
குடிமராமத்துப் பணி திட்டத்தில் ஏரி, குளம், கண்மாய்கள் துார்வாரப்பட்டன. வண்டல் மண் விவசாயத்துக்கு பயன்பட்டது. தி.மு.க., ஆட்சியில் ஒரு லோடு மண் அள்ளினால், 2,000 ரூபாய் கொடுக்க வேண்டும். பயிர்க் கடன்களை இரண்டு முறை தள்ளுபடி செய்தோம்.
விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். தமிழகம் முழுதும் 2,000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். தி.மு.க., அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து கிளினிக்கை மூடிவிட்டது.
ஒரு குடும்பம் பிழைக்க, எட்டு கோடி பேரை பழிவாங்குகிறது தி.மு.க., மக்களைச் சுரண்டும் குடும்பத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறைக்கென்று அமைச்சர் இருக்கிறாரா... அவர் செயல்படுகிறாரா என்றே தெரியவில்லை. ஊரகத்தில் குப்பையும் அள்ளுவதில்லை, சரியாக குடிநீரும் வழங்குவதில்லை.
நிர்வாகம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. கிராம ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நிதியை எடுத்து, வேறு பணிக்குப் பயன்படுத்துகின்றனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற முத்துராமலிங்க தேவர், தனது சொத்தின் ஒரு பகுதியை ஜாதி, மதம் பார்க்காமல் மக்களுக்குத் தானம் செய்தவர். ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்குவதோடு, மதுரை விமான நிலையத்துக்கு அவருடைய பெயரை வைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
குரூப் 4 தேர்வில் முறைகேடு நடை பெற்றதாக புகார் வந்திருக்கிறது.
இதனால், தேர்வு எழுதிய இளைஞர்கள் பாதிப்படைந்து உள்ளனர். இந்த அரசு, குரூப் 4 தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.