கோவை போக்குவரத்து சோதனை சாவடியில் அதிரடி ரெய்டு; ரூ.1.25 லட்சம் சிக்கியது
கோவை போக்குவரத்து சோதனை சாவடியில் அதிரடி ரெய்டு; ரூ.1.25 லட்சம் சிக்கியது
UPDATED : ஜூலை 14, 2026 02:09 PM
ADDED : ஜூலை 14, 2026 05:49 AM

கோவை: கோவை க.க.சாவடி போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் ஒரே இரவில் ரூ.1.25 லட்சம் கணக்கில் வராத பணம் சிக்கியது.
'யாரும் லஞ்சம் கொடுக்காதீர்' என்று முதல்வர் விஜய் சொன்னாலும், இங்கு சிலர் கேட்க தயாரில்லை. பிற மாநிலத்துக்கு செல்வதற்கு, சோதனைசாவடிகளை கடந்து செல்ல வாகனஓட்டிகள் லஞ்சம் கொடுப்பது காலம் காலமாக இருக்கும் நடைமுறை. இதில் எந்த வித மாற்றமும் இன்னும் ஏற்படவில்லை.
கேரள மாநிலத்திற்கு தினமும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் வணிக ரீதியிலான பொருட்களுடனும், சுற்றுலா பயணிகளுடனும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இவ்வாகன டிரைவர்கள் நுாறு ரூபாய் வரை மாமூல் தந்தால் மட்டுமே, ஆவணத்தில் முத்திரை வைக்கப்படுகிறது. அதுபோல் டி.பி., (டெம்பரரி பெர்மிட்) ஆன் லைனில் பெற்றிருந்தாலும் மாமூல் தர வேண்டும்.
கோவை அடுத்த க.க.சாவடியில் தமிழக அரசின் போக்குவரத்து துறை சோதனை சாவடி உள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வசூலிக்கப்படுவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை, 4:45 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத, ரூ.1.18 லட்சம் சிக்கியது. மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், உதவியாளர்கள் கல்பனா, பத்மா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதுபோல், கோவை நோக்கி வரும் வாகன சோதனை சாவடியில், ஏழாயிரம் ரூபாய் சிக்கியது. மோட்டார் வாகன ஆய்வாளர் காலிங்கத்திடம் விசாரணை நடத்தினர்.
க.க. சாவடி சோதனை சாவடியில் ஒரே இரவில் ரூ.1.25 லட்சம் சிக்கியது போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்றால் ஆண்டுக்கு 3 கோடி வரை வசூலாகும் என கூறப்படுகிறது. சோதனை சாவடிகளிலும் லஞ்சம் பெறும் முறையை ஒழிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
