அக்னிபாத் திட்டம் திரும்ப பெறப்பட்டதா: முப்படை தளபதி விளக்கம்!
அக்னிபாத் திட்டம் திரும்ப பெறப்பட்டதா: முப்படை தளபதி விளக்கம்!
ADDED : நவ 17, 2026 12:58 AM

புதுடில்லி: ''அக்னிபாத் திட்டம் திரும்ப பெறப்பட வில்லை. அதில் சில மாற்றங்களே செய்யப்பட்டன,'' என, நம் முப்படைகளின் தலைமை தளபதி என்.எஸ்.ராஜா சுப்ரமணி விளக்கம் அளித்துள்ளார்.
நம் ராணுவம், விமானம் மற்றும் கடற் படையில் இளைஞர்களை பணியமர்த்தும் நோக்கில், 2022 செப்டம்பரில், 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய பா.ஜ., அரசு அமல்படுத்தியது. இதன்படி, 17.5 - 21 வயதுக்குட்பட்ட இரு பாலரும், நான்கு ஆண்டுகளுக்கு முப்படைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்கள், 'அக்னி வீரர்'கள் என, அழைக்கப்படுகின்றனர்.
பணிக்காலத்தை நிறைவு செய்யும் அக்னி வீரர்களில், திறன் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில், 25 சதவீதம் பேர் நிரந்தரமாக பணியமர்த்தப்படுகின்றனர். தேர்வாகாத, 75 சதவீத பேர் பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, வரி விலக்கு பெற்ற சேவை நிதி தொகுப்பு மற்றும் திறன் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்துக்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில், மத்திய அரசு, அக்னிபாத் திட்டத்தில் சில மாற்றங் களைச் செய்தது. அதாவது, பணிக்காலத்தை நிறைவு செய்து, நிரந்தரப் பணியை பெறாத, 75 சதவீத அக்னி வீரர்களுக்கு, மேலும் இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நம் முப்படைகளின் தலைமை தளபதி என்.எஸ்.ராஜா சுப்ரமணி கூறியதாவது: அக்னிபாத் திட்டம், ஒருபோதும் திரும்ப பெறப் படவில்லை. இது பற்றி பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான்கு ஆண்டு களுக்கு முன் அக்னிபாத் திட்டத்தை தொடங்கிய போதே, இத்திட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறு ஆய்வு செய்யப்படும் என, தெரிவித்திருந்தோம்.
இது, மாற்ற முடியாத விதி அல்ல; எப்போதுமே ஆய்வுக்கு உட்பட்டது தான். முப்படைகளின் விரிவான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்குப் பின், அக்னிபாத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு இத்திட்டத்தையே எதிர்த்தவர்கள்தான், இத்திட்டம் குறித்து குழப்பத்தை ஏற்படுத்தி, இப்போது திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களையும் எதிர்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
