பெற்றோர், மாணவர்களை ஏமாற்றி அல்பலாஹ் பல்கலை வசூலித்த ரூ.415 கோடி; அமலாக்கத்துறை
பெற்றோர், மாணவர்களை ஏமாற்றி அல்பலாஹ் பல்கலை வசூலித்த ரூ.415 கோடி; அமலாக்கத்துறை
ADDED : நவ 19, 2025 02:38 PM

புதுடில்லி: பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரை ஏமாற்றி ரூ.415 கோடியை அல்பலாஹ் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் வசூலித்து இருப்பதை அமலாக்கத்துறை தமது விசாரணையில் கண்டுபிடித்துள்ளது.
டில்லியில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. தற்கொலைப்படையாக மாறிய பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தில் பரிதாபாத்தை தலைமையிடமாக கொண்ட அல்பலாஹ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
பல்கலை உரிமையாளர் ஜவாத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டிச.1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையின் போது, சித்திக்கின் பணபரிமாற்றங்கள் பற்றிய விவரம் ஒன்றை ரிமாண்ட் மனுவுடன் அமலாக்கத்துறை இணைத்து உள்ளது. அதில், சித்திக்கிற்கு ஏராளமான நிதி ஆதாரங்களும் இருப்பதாகவும், அவரது பெற்றோர் வளைகுடாவில் உள்ளனர் என்றும் இதுவும் நிதி உதவி பெற ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட காலத்தில் இருந்தும், 2014-15ம் நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை தன்னார்வ அமைப்புகள் மூலம் கணிசமான வருவாய் காட்டப்பட்டு உள்ளது.
2014-15 முதல் 2024-25 வரையான நிதியாண்டுகளில் இந்த பல்கலைக் கழகத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.415.10 கோடி ஆகும். பல்கலைக்கழகத்திற்கு பெறப்பட்ட நிதியின் ஒரு பகுதி மட்டுமே தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
நிதி ஆதாரமாக பெறப்பட்ட பணம் அனைத்தும், அறக்கட்டளை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. பின்னர், இவை சித்திக்கின் தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது. ஏராளமான வங்கிக் கணக்குகளில் பெறப்பட்ட நிதி ஆதாரங்களுக்கான முழு தடயங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
இவ்வாறு தமது ரிமாண்ட் மனுவில் அமலாக்கத்துறை குறிப்பிட்டு உள்ளது.

