பீஹாரில் 160 தொகுதிகளில் வெற்றி: அமித்ஷா நம்பிக்கை
பீஹாரில் 160 தொகுதிகளில் வெற்றி: அமித்ஷா நம்பிக்கை
UPDATED : நவ 01, 2025 09:58 PM
ADDED : நவ 01, 2025 09:55 PM

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: நாட்டில் அரசியல் விழிப்புணர்வு உள்ள மாநிலங்களில் பீஹாரும் ஒன்று. கடந்த 20 ஆண்டுகளில் மாநிலம் கண்டுள்ள வளர்ச்சியை மக்கள் உணர்வார்கள். நிதிஷ்குமார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது என இளைஞர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த காலங்களில் கொள்ளை, கொலை மற்றும் வழிப்பறி குறித்தே இங்கு விவாதித்தார்கள். இன்று வளர்ச்சியை பற்றி பேசுகிறார்கள். வரும் தேர்தலில் தேஜ கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி கூறியுள்ளார்.
மாநிலத்தில் 2.8 கோடி குடும்பங்கள் உள்ளன. புதிதாக 2.6 கோடி பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். இதற்காக 'பி', 'சி','டி' பிரிவுகளில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அதற்கு சராசரியாக ரூ.39 ஆயிரம் சம்பளம் என நிர்ணயித்து கொண்டாலும் மொத்தம் ரூ.12.85 லட்சம் கோடி தேவை. இது பீஹாரின் பட்ஜெட்டை விட 4 மடங்கு அதிகம் ஆகும்.
இந்த வாக்குறுதியை தேஜஸ்விக்கு ராகுலும் லாலுவும் தான் அளித்து இருப்பார்கள். ரூ.12. 85 லட்சம் கோடிக்கு எங்கே போவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

