ஆந்திரா முதல் கும்பமேளா வரை : இந்தாண்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவங்கள்
ஆந்திரா முதல் கும்பமேளா வரை : இந்தாண்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவங்கள்
ADDED : நவ 01, 2025 10:30 PM

புதுடில்லி: ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதற்கு ஜனாதிபதி திரவுபதிமுர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவங்களின் முக்கிய தொகுப்பு
கரூர் கூட்ட நெரிசல்
தவெக தலைவர் விஜய் அரசியல் சுற்றுபயணத்தில் கடந்த மாதம் 27 ம் கரூர் வேலுசாமிபுரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.
பெங்களூரு அணி கொண்டாட்டத்தில்
பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பை வென்றது. இதனை கொண்டாடுவதற்காக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 ல் வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
கோவா
கோவா மாநிலத்தில் ஷிர்கோவான் கிராமத்தில் உள்ள கோவிலில் கடந்த மே மாதம் 3ம் தேதி ஏற்பட்ட பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் இறந்தனர்.
டில்லி ரயில்வே நிலையம்
டில்லி ரயில் நிலையத்தில் கடந்த பிப்.,15 ல் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கும்பமேளா செல்வதற்காக பயணிகள் காத்திருந்தனர். இரண்டு நடைபாதைகளை இணைக்கும் நடைபாதையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் மீது ஒருவர் விழுந்து 6 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
கும்பமேளாவில்
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்த கும்பமேளாவின் போது கடந்த ஜன.,29ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர். புனித நீராடுவதற்காக ஏராளமானோர் ஒன்று கூடியதால் நெரிசல் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

