ADDED : ஆக 27, 2026 07:35 PM

பீஜிங்: கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நேபாளம் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றொரு அபாயத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என சீனா எச்சரித்து உள்ளது.
திபெத்தில் பிரமாண்ட பனிப்பாறை உருகி , அங்குள்ள ஏரியில் உடைப்ப ஏற்பட்டு அதிகளவு நீர் நேபாளத்தில் உள்ள கோஷி நதியில் கலந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வழியில் இருந்த பாலங்கள், கட்டடங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த திடீர் பேரழிவில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. மீட்புப்பணியில் நேபாள ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் நேபாளம் மற்றொரு ஆபத்தை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்து உள்ளது.
இது தொடர்பாக சீன அதிகாரிகள் கூறுகையில், நேபாளத்தில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமான பனிப்பாறை உருகிய இடமருகே, திபெத்தின் சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள ஏரி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மீட்புப்பணிகளுக்கு உதவவும், மற்றொரு பேரிடர் ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்று( ஆக.,27) நிலவரப்படி 20 லட்சம் கன மீட்டர் நீர் கொள்ளளவு கொண்ட அந்த ஏரி நிரம்பி வழிகிறது. அடுத்த மூன்று நாட்களுக்குள் அந்த 3 நாட்களுக்கும் 30 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கலாம். அந்த ஏரி உடைந்தால் மற்றொரு வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
