காங்கிரஸ் எம்பி கார்த்தியின் சொத்து முடக்கம்: உறுதி செய்தது தீர்ப்பாயம்
காங்கிரஸ் எம்பி கார்த்தியின் சொத்து முடக்கம்: உறுதி செய்தது தீர்ப்பாயம்
ADDED : அக் 31, 2025 06:33 PM

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் ரூ.54 கோடி  மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கியதை  மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது.
மன்மோகன் சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்த போது, மொரீஷியஸ் நாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதி பெற்றது.இந்த அனுமதி, விதிகளை மீறி வழங்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.
இதற்கு, அப்போதைய மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியதாகவும், இதற்காக அவரது மறைமுக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த விவகாரத்தில் கார்த்தி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை ஆகி உள்ளார்.
இந்த வழக்கில் கடந்த 2018 ம் ஆண்டு கார்த்திக்கு சொந்தமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள ரூ.54 கோடி  மதிப்புளள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், கார்த்தி மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தீர்ப்பாயம், கார்த்தியின் சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கியதை  உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

