UPDATED : அக் 14, 2026 03:57 AM
ADDED : அக் 14, 2026 01:49 AM

கொல்கட்டா: மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி வீட்டிற்குள் கத்தியுடன் ஒரு பெண் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றதாக அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் கொல்கட்டாவில் உள்ள முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் நேற்று மாலை தன்னிஷ்டா சாஹா என்ற பெண் அத்துமீறி நுழைய முயன்றார். அங்கு இருந்த பாதுகாப்பு படையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், மம்தா பானர்ஜியின் உறவினர் என ஆவேசமாக கத்தினார். மேலும், தகாத வார்த்தைகளில் பேசிய அவர், சாலையில் படுத்து அமளியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திரிணமுல் காங்., கட்சி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
திரிணமுல் காங்., கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி, மூன்று முறை மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். அவரது வீட்டுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் கத்தியுடன், போதையில் ஒரு பெண் எப்படி அத்துமீறி நுழைந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாதுகாப்பு கெடுபிடிகள் எப்படி தளர்த்தப்பட்டன. டில்லியில், பா.ஜ.,வுக்கு எதிராக மம்தா பானர்ஜி தீவிரமாக போராடி வருவதால், அவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான சதியா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எனவே, இது குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
