சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான், மகன் இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை: பான் கார்டு வழக்கில் கோர்ட் அதிரடி
சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான், மகன் இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை: பான் கார்டு வழக்கில் கோர்ட் அதிரடி
ADDED : நவ 17, 2025 04:03 PM

லக்னோ: சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான், அவரது மகன் முகமது அப்துல்லா ஆசம் இருவரும் பான் கார்டு வழக்கில் குற்றவாளிகள் என்று கூறி, நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவராக இருப்பவர் ஆசம்கான். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மகன் பெயர் முகமது அப்துல்லா ஆசம். முன்னாள் எம்எல்ஏ.
முகமது அப்துல்லா ஆசம் வெவ்வேறு தேதிகளில் பிறந்ததாக குறிப்பிட்டு 2 பான் கார்டுகளை பெற்றதாக பாஜ எம்எல்ஏ ஆகாஷ் சக்சேனா என்பவர் ராம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அவர் தமது புகாரில், ஒரு பான் கார்டில் அப்துல்லாவின் பிறந்த தேதி ஜன.1,1993 என்றும் வேறு ஒரு கார்டில் செப்.30, 1990 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், விசாரணை முடித்து, கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந் நிலையில், இந்த வழக்கில் சமாஜ்வாடி தலைவர் ஆசம்கான், அவரது மகன் முகமது அப்துல்லா ஆசம் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று ராம்பூரில் உள்ள சிறப்பு எம்பி, எம்எல்ஏ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றம் குற்றவாளிகள் என்று அறிவித்ததை அடுத்து, ஆசம் கான் மற்றும் அவரது மகன் முகமது அப்துல்லா ஆசம் இருவரும் நீதிமன்ற அறைக்குள் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
அதன் பின்னர், தீர்ப்பு விவரங்களை நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது. மோசடி, குற்றவியல் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இருவரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

