மோசமான வானிலை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்
மோசமான வானிலை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்
UPDATED : அக் 30, 2025 11:14 PM
ADDED : அக் 30, 2025 11:02 PM

சிலிகுரி : பூடான் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமானம் மோசமான வானிலை காரணமாக மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அவர் பத்திரமாக ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.
இந்தியா பூடான் இடையிலான பொருளாதார, கலாசாரம் ஆகியவற்றை இன்னும் மேம்படுத்துவதற்காக அரசு முறை பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிளம்பினார். இந்த பயணத்தின் போது, 1765 ல் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சங்சென் சோயிகோர் புத்த மடத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. நீர்மின்சார திட்டம், எரிசக்தி திட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யவும் உள்ளார். மேலும், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கயால் வங்சுக் மற்றும் பிரதமர் டாஷோ ஷெரீங் மற்றும் அந்நாட்டு அமைச்சர்களை சந்திக்கவும் உள்ளார். இந்த பயணத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருந்தன.
ஆனால், பூடான் செல்லும் வழியில் கனமழை மற்றும் வானிலை தெளிவாக இல்லாத காரணத்தினால், விமானம் மேற்கு வங்க மாநிலம் சிலிகிரியில் உள்ள விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விமானத்தில் இருந்து அனைவரும் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். நிர்மலா சீதாராமன், சிலிகிரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

