ADDED : அக் 30, 2025 10:59 PM

ஷேக்புரா: '' உங்கள் ஓட்டுகளை திருட கடைசி வரை முயற்சி செய்வார்கள். வாக்காளர்கள் ஓட்டுச்சாவடியில் கடைசி வரை இருந்து அதனை தடுக்க வேண்டும், '' என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
பீஹாரின் ஷேக்புரா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ஓட்டுகளை பாஜவினர் திருடுகின்றனர். முதலில் மஹாராஷ்டிரா, ஹரியானாவில் திருடிய அவர்கள் பீஹாரில் திருட முயல்கின்றனர். இதனால், தான் வாக்காளர் அதிகார யாத்திரையை நடத்தினோம். கடைசி நேரத்திலும் உங்களது ஓட்டுகளை திருட முயற்சிப்பார்கள். ஆனால், நீங்கள் ஓட்டுச்சாவடியில் கடைசி வரை நின்று, உங்கள் ஓட்டுகள் திருடு போகாமல் தடுக்க வேண்டும். அதானி, அம்பானி பயன் பெறவும், அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை முடிப்பதுமே அவர்களின் இலக்கு. தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த உரிமையும் இல்லாத சுதந்திரத்துக்கு முந்தைய நிலையை விரும்புகின்றனர்.
அதானி மற்றும் அம்பானியின் கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். தாராவியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அதானியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பீஹார் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பீஹாரிலும், இந்தியாவிலும் சீனப் பொருட்களை அதானி மற்றும் அம்பானி விற்க வேண்டும் என்பதால், பீஹாரில் எந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவில்லை. அனைத்தும் மதம் மற்றும் ஜாதிக்கான அரசாக மஹாகட்பந்தன் அரசு இருக்கும். பீஹாருக்காக பணியாற்றுவோம். அரசு கல்லூரிகள், பல்கலைகழகங்கள், பள்ளிகள் மற்றும் சிறந்த மருத்துவமனைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவோம். இவ்வாறு ராகுல் பேசினார்.

