பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளை சம்பவம்; போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட மூவர் கைது
பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளை சம்பவம்; போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட மூவர் கைது
ADDED : நவ 22, 2025 04:09 PM

பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூருவில் வங்கி ஏடிஎம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளையடித்த சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெபி நகரில் உள்ள தனியார் வங்கி கிளையில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயுடன் சென்று கொண்டிருந்த ஏடிஎம் வேனை சொகுசு காரில் வந்த சிலர் மறித்துள்ளனர். மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிய அவர்கள், வேனில் உள்ள ஊழியரை மிரட்டி ரூ. 7 கோடியுடன் தங்கள் வாகனத்தில் ஏற்றினர். பின்னர், டெய்ரி சர்க்கிள் அருகே காரை நிறுத்தி, வங்கி ஊழியரை கீழே தள்ளிவிட்டு அருகில் உள்ள பாலத்தில் வண்டியுடன் தப்பிவிட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
வங்கி ஊழியரிடம் விசாரணை நடத்திய போலீசார், பன்னார்கட்டா சாலையில் சென்ற வேனை பிடிக்க அனைத்து சோதனைச் சாவடிகளையும் உஷார்படுத்தினர். இந்த சம்பவத்தில் வேனில் இருந்த ரூ.7.11 கோடியும் கொள்ளை அடிக்கப்பட்டது.
பட்டப்பகலில் நிகழ்ந்த துணிகர கொள்ளையைத் தொடர்ந்து, சொகுசு வேன் எங்கிருந்து வந்தது? அதன் பதிவெண் உள்ளிட்ட விவரங்களை கண்டறிய, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், ரூ.7.11 கோடி கொள்ளையடிக்க சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது;கொள்ளையர்களிடம் இருந்து ரூ.5.76 கோடி முதற்கட்டமாக பறிமுதல் செய்யப்பட்டது. எஞ்சிய தொகையை மீட்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் 11 குழுக்களும், 200 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வங்கி ஏடிஎம் வாகனத்தின் பொறுப்பாளர், சிஎம்எஸ் இன்போசிஸ்டம் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மற்றும் கோவிந்தாபுரா போலீஸ் ஸ்டேஷன் கன்ஸ்டபிளை கைது செய்துள்ளோம்.
இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க கோவா மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு 6 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன, எனக் கூறினார்.

